Published : 22 May 2015 09:12 AM
Last Updated : 22 May 2015 09:12 AM
வேலூர் அருகே அரியூர் குப்பத்தில் நடந்த கோயில் ரத ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகினர்.
வேலூர் அடுத்துள்ள அரியூர் குப்பம் கிராமத்தில் பொன்னியம் மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட ரத ஊர்வலம் நேற்று அதிகாலை நடந்தது. சுமார் 20 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் உற்சவர் சிலையை வைத்து ஊர்வலமாக கிராம மக்கள் இழுத்துச் சென்றனர்.
ரத ஊர்வலம் நேற்று காலை 7 மணியளவில் ஆலமரத் தெரு வழியாக வந்தது. தெருவில் இருந்த மின் கம்பிகள் ரதத்தின் மீது படாமல் இருக்க சிலர் நீண்ட குச்சிகள் உதவியுடன் மின் கம்பியை தூக்கிப் பிடித்துச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ரதத்தின் மீது மின் கம்பி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து ரதத்தின் அருகில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அரியூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (57), குமரேசன் (50), தேவராஜ் (50), மேல்மருவத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (37) ஆகியோர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
படுகாயங்களுடன் வசந்தகுமார் (23), ரூபிகா (3), கோட்டீஸ்வரன் (40), அசோக்குமார் (20), சக்திவேல் (20), பெருமாள் (31) ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக அரியூர் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பிரகலாதன் கொடுத்த புகாரின் பேரின் திருவிழா ஏற்பாட்டாளர்கள் சந்திரசேகரன், தசரதன், சிவக்குமார், முருகானந்தம், சுரேஷ் ஆகியோர் மீது அரியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT