Published : 02 May 2014 12:04 PM
Last Updated : 02 May 2014 12:04 PM

நாங்குநேரி வானமாமலை மடம் புதிய ஜீயர் சுவாமிகள் பட்டணப்பிரவேசம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் 31-வது ஜீயராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் (67) வியாழக்கிழமை பட்டணப்பிரவேசமாக அழைத்து வரப்பட்டார்.

வைணவ மடங்களில் புகழ்பெற்ற நாங்குநேரி வானமாமலை மடத்தின் 30-வது ஜீயர் ஸ்ரீகலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை பரமபதம் அடைந்தார். சுவாமிகளின் பூத உடல் வானமாமலை மடத்தில் பக்தர்கள் அஞ்சலிக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்தது.

மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் வசந்தகுமார், எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி., சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுவாமிகளின் உடலுக்கு அருகில் சிறப்பு யாஹம் வளர்க்கப்பட்டது. பிரபந்தம் சேவிக்கப்பட்டு, கும்ப நீரால் உடலுக்கு அபிஷேகம் நடை பெற்றது. புதிதாக பல்லக்கு செய்யப்பட்டு, அதில் சுவாமிகளின் பூத உடலை வைத்து, நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள `திருவரசு’ என்ற இடத்துக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வானமாமலை மடத்தில் பரமபதம் அடைந்த ஜீயர்களின் பிருந்தாவனங்கள் இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளன. அங்கு சுவாமிகளின் பூதஉடல் ஜீவசமாதி செய்யப்பட்டது.

புதிய ஜீயர்

மடத்தின் 31-வது பட்டம் ஜீயராக ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் (67) நியமனம் பெற்றுள்ளார். நாங்குநேரியைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். சிறுவயது முதலே வானமாமலை மடத்தில் கைங்கர்யம் செய்து வந்தார். குறிப்பாக இதற்கு முன் பதவி வகித்த மூன்று ஜீயர் சுவாமிகளுக்கு, திருத்தண்டம் சுமந்துவரும் பணியை செய்து வந்தார். தற்போது அவரே புதிய ஜீயராக பொறுப்பேற்றுள்ளார்.

பட்டணப் பிரவேசம்

வியாழக்கிழமை 30-வது பட்டம் சுவாமிகளின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட அதே பல்லக்கில், புதிய ஜீயர் சுவாமிகளை அமரவைத்து, திருவரசில் இருந்து மடத்துக்கு பக்தர்கள் அழைத்து வந்தனர். நாங்குநேரி ரதவீதிகள் வழியே, அவரது பட்டணப் பிரவேசம் சடங்குகள் நடத்தப்பட்டன. புதிய ஜீயரிடம், அரசியல் கட்சி பிரமுகர்களும் மடாதிபதிகளும் சீடர்களும் ஆசிபெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x