Published : 29 May 2015 03:08 PM
Last Updated : 29 May 2015 03:08 PM
ஆவினில் நிலவும் பால் கொள்முதல் பிரச்சினை தொடர்பாக, கூட்டுறவு சங்கத் தலைவர்கள், குளிர்வு நிலைய செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஆவினில் பால் கொள்முதல் செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக, உற்பத்தியாளர்களிடையே புகார் எழுந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கோவை மாவட்டத்தில் தினம் ஒரு வட்டாரம் என்ற வகையில் கொள்முதலுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆவின் நிறுவனம் கொள்முதலைக் குறைத்து வருவதைக் கண்டித்து மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக, கோவை மாவட்டத்தில் ஆவின் ஒன்றியங்களில் உள்ள குளிர்வு நிலையங்களில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதில், கொள்முதல் நிலையச் செயலாளர்களும், கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கத் தலைவர் களும் கலந்து கொண்டனர். உற்பத்தியாளர்களிடையே கொள்முதல் குறைப்புக்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்துவது, அதேசமயம், ஆவின் நிறுவனத்துக்கு தேவையான அளவு பாலை மட்டும் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இருப்பு வைக்கும் அளவைவிட கூடுதலாக வரத்து உள்ளதால், கொள்முதலைக் கட்டுப்படுத்துவது என்ற ஒரே நோக்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் உடுக்கம்பாளையம் எஸ்.பரமசிவம் கூறும்போது, ‘தமிழகத்தில் உள்ள 17 ஆவின் ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அந்தந்த பகுதி பால் குளிர்வு நிலையங்களில் நிலைய செயலாளர்களுக்கும், கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்குமிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. அதில் கொள்முதலை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சென்னையில் விரைவில் இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். முடிவு எப்படியிருப்பினும், கொள்முதலுக்கு விடுமுறை விடுவதை அனுமதிக்க முடியாது. ஏற்கெனவே ஆவினுக்கு பால் வழங்கி வருபவர்களிடமிருந்து வழக்கம்போல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT