Published : 24 May 2015 10:41 AM
Last Updated : 24 May 2015 10:41 AM
மதுரை மாநகராட்சி பகுதியில் ஆதார் எண் இணைக்கப்படாத 30 ஆயிரம் வாக்காளர்கள் வரும் 25, 26-ம் தேதி இருப்பிட ஆதாரங்களை அளிக்காவிட்டால் அவர்களின் பெயர்களை நீக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த 3 மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள 9.5 லட்சம் வாக்காளர்களில் சுமார் 30 ஆயிரம் பேர், இதுவரை தங்களது ஆதார் எண் அல்லது செல்போன் எண்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் நேற்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:
மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண் இணைக்காதவர்கள் விவரம் அந்தந்த வாக்குச்சாவடி, வார்டு அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தொகுதியிலிருந்து, வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே இப்பட்டியலில் பெயர் இருப்பவர்கள், தங்களது இருப்பிடத்தை உறுதி செய்ய விரும்பினால் வரும் 25, 26ம் தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் அல்லது இருப்பிடச்சான்றிதழ் அல்லது செல்போன் எண் ஆகியவற்றை அந்தந்த தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரை அணுகி ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லாவிடில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இது இறுதிகட்ட வாய்ப்பு. இந்த 2 நாளில் இருப்பிட ஆதாரங்களை சமர்ப்பிக்காதோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT