Published : 12 May 2015 04:00 PM
Last Updated : 12 May 2015 04:00 PM
ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு கடத்தவிருந்த 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பர்கூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீஸார் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அடுத்த ஒப்பதவாடி இணைப்பு சாலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டை ரேசன் அரிசி (5 டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநரான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டையை சேர்ந்த விஜி(எ)விஜயகுமார்(27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேசன் அரிசி கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மினி லாரி, ரேசன் அரிசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் போலீஸார் ஒப்படைத்தனர்.
அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்த, லாரியின் உரிமையாளரான சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.29 ஆயிரமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT