Published : 30 May 2015 01:54 PM
Last Updated : 30 May 2015 01:54 PM
கோடை வெயில் காரணமாக வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் வராமல் தடுக்கவும் விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் 16 இடங்களில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி ஆகியவை அதிகம் காணப்படுகின்றன.
கோடையில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக குடிக்க தண்ணீர் கிடைக்காததால் வன விலங்குகள் உயிரிழக்க நேரிடும். மேலும், குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் நுழைந்து தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
வன விலங்குகள் உயிர் சேதத்தையும், விவசாயிகளின் பயிர் சேதத்தையும் தடுக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மலை அடிவாரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. செண்பகத்தோப்பு, குன்னூர், டபிள்யூ புதுப்பட்டி, வடக்கு தேவதானம், அய்யனார்கோயில், பிளவக்கல் அணை, வல்லபுரம், சாஸ்தாகோயில், சாப்டூர், பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இது குறித்து, வன அலுவலர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் வன விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள பண்ணைகள், தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்து கின்றன.
குடிநீர் கிடைக்காததால் சில விலங்குகள் வனப் பகுதியிலேயே உயிரிழப்பதும் உண்டு. அதைத் தடுக்க, வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இதுவரை 16 இடங்களில் வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி மட்டுமின்றி, ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மோட்டார், மோட்டார் அறை கட்டுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.
இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கட்டாற்றுப் பகுதிகளில் தடுப்பணைகள், படுகை அணைகளும் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மண் அரிமானம் தடுக்கப்படுவதுடன் வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீரும் கிடைக்கிறது.
இது தவிர, நபார்டு வங்கி உதவியுடன் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் பசுமை போர்வையை மேம்படுத்துதல் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 250 ஹெக்டேர் வனப் பகுதியில் 5 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 அடி ஆழம் உடைய 500 நீர் சேகரிப்பு குழிகள் வெட்டப்பட்டு சரிவின் கீழ் பகுதியில் தீவன மரக்கன்றுகள் நடப்படுவதுடன் தீவனப்புல் விதைகளும் விதைக்கப்பட்டுள்ளன. 2014-15-ல் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT