Published : 31 May 2015 01:21 PM
Last Updated : 31 May 2015 01:21 PM

ஆந்திர என்கவுன்ட்டர் விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை உடனே செயல்படுத்துக: வைகோ

ஆந்திர என்கவுன்ட்டர் விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரையை உடனே செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்துயுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் நடக்காத கொடுமையாக, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான இருபது அப்பாவித் தமிழர்களை, ஆந்திரக் காவல்துறையினர் பேருந்துகளில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, சேசாசலம் காட்டுக்குள் கடத்திச் கொண்டு சென்று, மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து, நினைத்தாலே நெஞ்சு நடுங்கக் கூடிய விதத்தில் அவர்களது அங்கங்களை வெட்டிச் சிதைத்து, பின்னர் சுட்டுக்கொன்று உடல்களைக் காட்டில் வீசி எறிந்தனர்.

ஆனால் அவர்கள் செம்மரங்களை வெட்ட முயன்றார்கள்; காவல்துறை, வனத்துறையினருடன் மோதல் என்று ஆந்திர அரசு கட்டுக்கதை புனைந்தது. தமிழகம் கொதித்து எழுந்தது. சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உண்மையைப் புலப்படுத்தவும், நீதி கிடைக்கவும் போராடினர்.

மனித உரிமைப் போராளி, மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் மாண்புமிகு சுரேஷ் அவர்கள் உள்ளிட்ட மனித உரிமை விற்பன்னர்களைக் கொண்டு, நடந்த கோரப் படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தார். காவல்துறையின் பிடியில் இருந்து தப்பித்து வந்த சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகிய மூவரையும் தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு கொண்டு நிறுத்தி, அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து, ஆந்திரக் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நிரூபிக்கச் செய்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தியது; சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில், தமிழர்கள் படுகொலை குறித்து மத்திய அரசின் குற்றப் புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை, மத்திய அரசும், ஆந்திர அரசும் எடுக்க வேண்டும்; அவ்விதம் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நான்கு வார காலத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆந்திர அரசின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி ஆகும். மிருகங்களை விடக் கொடுமையாக நடந்து கொண்ட ஆந்திரக் காவல்துறையின் மீது வீசப்பட்ட சவுக்கடி ஆகும்.

மேலும், ஆந்திராவின் சிறப்பு அதிரடிப் படையால் படுகொலை செய்யப்பட்ட இருபது தமிழர்களின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்ச ரூபாயை ஆந்திர அரசு இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்; இப்படுகொலையில் மூன்று முக்கிய சாட்சிகளான சேகர், பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோரிடம், தமிழ்நாட்டிலேயே நீதிபதி முன்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவ்ñராட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழகக் காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஆனால், இந்த மூன்று சாட்சிகளின் உயிருக்கும் ஆபத்து இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு மே 9 ஆம் தேதிக்குப் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பின்னர்தான் இன்று மீண்டும் பாதுகாப்பு அளித்து இருக்கின்றனர்.

கடமை தவறிய தமிழக அரசு!

தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு 20 தமிழர்கள் படுகொலையை முற்றாக உதாசீனப்படுத்தி வருகிறது. தனது கடமையில் தவறி இருக்கின்றது. இன்றைய முதல் அமைச்சர் இதுவரையிலும் ஒரு அனுதாப வார்த்தை கூடக் கூறாதது, மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்தப் படுகொலைகளை நேரடியாகப் பார்த்துவிட்டு, அந்த இரவில் தப்பிச் சென்ற மேலும் சில சாட்சிகள், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று பயந்து, வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. செம்மரக் கடத்தலை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் ஆந்திரக் காவல்துறையினர் தொடர்ந்து தமிழகத்திற்குள் வந்து, சோதனை செய்வதும் விசாரிப்பதும் சிலரைக் கைது செய்வதும் தொடர்வதால் அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே, எந்த பயமும் இன்றி சாட்சியம் அளிக்கக்கூடிய உத்தரவாதத்தைத் தமிழக அரசும் காவல்துறையும் ஏற்படுத்த வேண்டும்.

உண்மையைச் சொன்ன மூன்று சாட்சிகளும் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதால், அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவியைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.

தற்போது ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் இருபது தமிழர்கள் படுகொலை குறித்து நடைபெறுகின்ற பொதுநல வழக்கில், தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொள்வது மிக முக்கியமான கடமை ஆகும்.

கொல்லப்பட்ட இருபது பேர் மற்றும் மூன்று சாட்சிகள் பயன்படுத்திய அலைபேசித் தொடர்புகள் அனைத்தும் தமிழகக் காவல்துறையினர் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கைதான் முக்கியமான சாட்சி ஆகும். ஆனால், இருபது பேர் படுகொலையில், திருப்பதி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையும், திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மறு பரிசோதனை அறிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்படாதது கண்டனத்திற்கு உரியதாகும். எனவே, தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளைப் பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆந்திர அரசு நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முற்பட்டு விட்ட நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை உடடினயாகச் செயற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையேல், இந்த இரண்டு அரசுகளும், தமிழர்கள் படுகொலையில் நீதியை அழிக்கக் கரம் கோர்த்துச் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும். இப்படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மட்டும் அல்லாது, இதன் பின்னணியில் இருப்போர் எவ்வளவு உயர்ந்த அதிகாரப் பதவியில் இருப்பினும் உண்மையைக் கண்டறிந்து அவர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x