Published : 30 May 2015 06:05 PM
Last Updated : 30 May 2015 06:05 PM

அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்

அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஐஐடி பெயரை பயன்படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதாலும், நாட்டின் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டதாலும் சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி இயக்குநர் சிவகுமார் சீனிவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னாட்சி நிறுவனமான சென்னை ஐஐடி, சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இதற்கு மத்திய அரசு காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கல்வி வளாகத்தை அரசியல் வளாகமாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள், இயக்கங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.

மாணவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என ஐஐடி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அங்கு பல அமைப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்றோர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து கருத்துரிமையின் கழுத்தை நெரித்தவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கல்வி நிலையங்களில் அரசியல் தூண்டுதல், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x