Published : 07 May 2014 08:59 AM
Last Updated : 07 May 2014 08:59 AM
‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு சட்டத்தை சொல்லி வணிகர்களை மிரட்டி அமைச்சரின் பெயரைச் சொல்லி அதிகாரிகள் பணம் பறிக்கிறார்கள்’ என்று கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ‘தி இந்து’விடம் மேலும் பேசிய விக்கிரமராஜா, “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு சட்டத்தைச் சொல்லி மிரட்டி, இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் தோறும் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.
அமைச்சரின் பெயரைச் சொல்லியே அதிகாரிகள் மாமூல் கேட்கிறார்கள். சென்னையில் ஒரு பிரபல ஓட்டலில் அமைச்சர் பெயரைச் சொல்லி ஒரு கோடி ரூபாய் கேட்டு, முதல் தவணையாக 25 லட்சத்தை வசூலித்தும் சென்றிருக்கிறார்கள்.
இதற்குப் பிறகாவது தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக ஒருபோதும் இருக்கமாட்டோம். ஒரு சிறு வணிகர் கூட இன்னலுக்கு ஆளாகக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். மதுரை மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் ஏற்கெனவே இந்தப் பிரச்சினை குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வந்தபோதே, அதிகாரிகளை அழைத்து, ‘எந்த வணிகரையும் அச்சுறுத்தக் கூடாது’ என்று கண்டிப்பான உத்தரவு போட்டேன். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தினோம். அதையும் மீறி தவறு நடந்திருப்பதாக விக்கிரமராஜா தெரிவித்திருக்கிறார்.
ஊட்டியிலும் மார்த்தாண்டத்திலும் அதிகாரிகள் பணம் வசூலித்ததாக அவர் சொன்னதால் ஊட்டியில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். மார்த்தாண்டத்திலும் விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகளை கண்டிப்பாக சஸ்பெண்ட் செய்வோம்.
வேறு எந்த அதிகாரியாவது அமைச்சர் பெயரைச் சொல்லி பணம் கேட்டதாக பெயர் குறிப்பிட்டு தகவல் கொடுத்தால் அந்த அதிகாரியையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்புவோம். எந்தச் சூழலிலும் வணிகர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT