Last Updated : 04 May, 2015 07:44 AM

 

Published : 04 May 2015 07:44 AM
Last Updated : 04 May 2015 07:44 AM

கோடை வெப்பத்தை தணிக்கும் ‘விசிறி’ கிராமம்

விசிறி தயாரிப்பதையே குடிசைத் தொழிலாக கொண்டு இயங்கி வரும் வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில், கோடை வெப்பத்தை தணித்து மக்களின் புழுக்கத்தை போக்கும் வகையில் விசிறி தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பனை ஓலை விசிறிகளை தயாரிப் பதையே 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைத் தொழிலாக கொண்டு இயங்குகிறது திருவள் ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.சி.ஆர். கண்டிகை கிராமம். இங்கு, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின் றனர். தற்போது அக்னி நட்சத் திரம் தொடங்கும் நிலையில், விசிறி தயாரிக்கும் பணி தீவிர மடைந்துள்ளது.

இதுகுறித்து, விசிறி தயாரிக்கும் பலராமன் கூறியதாவது: ஜனவரி முதல், ஜூன் வரை 6 மாதங்கள் விசிறி தயாரிப்புப் பணி நடக்கும். முதல் 3 மாதங்கள் பள்ளிப்பட்டு, வேலூர் மற்றும் ஆந்திர மாநிலமான சித்தூர், திருப்பதி, ரேனிகுன்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள வயல் வெளி, காட்டுப் பகுதிகளில் வளர்ந்துள்ள இளம் பனை மரங்களிலிருந்து பனை ஓலைகளை வெட்டி எடுத்து வந்து, காய வைப்போம். அதன் பிறகு ஏப்ரல் முதல் ஜூன் வரை அந்த பனை ஓலைகளில் இருந்து விசிறி தயாரித்து, விற்பனை செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய மோகன் என்பவர், “இளம் பனை மரங்களிலிருந்து வெட்டி எடுத்து வந்து காய வைக்கப்பட்ட பனை ஓலைகளை, தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு, விசிறி வடிவத்துக்கு கத்தரிக் கோலால் நறுக்குவோம்.

அவ்வாறு நறுக்கப்பட்ட பனை ஓலைக்கு பச்சை, சிகப்பு ஆகிய வற்றில் ஏதேனும் ஒரு நிற சாயம் போடுவோம். தொடர்ந்து, ஈச்சம் செடியிலிருந்து சேகரிக்கப்பட்ட குச்சி, பனை ஓலை குருத்து, பனை நாறு ஆகியவை மூலம் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இறுதியாக அந்த பனை ஓலை விசிறியாக உருமாறும்’’ என்று விவரித்தார்.

சுப்ரமணியன் என்பவர், கூறும் போது “கணவன், மனைவி என இருவர் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 விசிறிகள் தயாரிக்கலாம். ரூ.7 செலவில் தயாரிக்கப்படும் இந்த விசிறிகளை, திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல், சென்னை, வேலூர், காஞ்சி புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடைகள், சந்தைகள், திருவிழாக்கள், திருமண நிகழ்வு களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கிறோம்.

தற்போது இளம் பனை மரங்களை காண்பதே அரிதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 400 குடும்பத்தினர் விசிறி தயாரிப்பில் ஈடுபட்ட நிலையில், தற்போது 200 குடும்பத்தினர் மட்டுமே ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x