Last Updated : 03 May, 2014 08:02 AM

 

Published : 03 May 2014 08:02 AM
Last Updated : 03 May 2014 08:02 AM

குண்டுவெடிப்பு விசாரணையில் திருப்பம்: சென்னையில் அடுத்தடுத்த மிரட்டல்களால் மக்கள் பீதி

தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான முக்கிய ஆதாரங்கள், சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்துள்ளன. இதற்கிடையே, நகரில் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்களால் பீதி ஏற்பட்டது.

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலையில் வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை, உளவுப் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் முரண்பாடான தகவல்களே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘‘தமிழகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடக்கவில்லை. வெடித்தது ‘டைம்பாம்’ வகையிலான குண்டு. குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வகையில் இது செட் செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடித்த நேரமான காலை 7.15 மணிக்கு, இந்த ரயில் ஆந்திர மாநிலம் கூடூர் அருகே சென்றிருக்க வேண்டும். எனவே, குண்டு வைத்த தீவிரவாதிகள் தமிழகத்துக்கு குறிவைக்கவில்லை’’ என்று சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், உண்மையில் இது தமிழகத்துக்கு வைக்கப்பட்ட குறிதான் என்பது சிபிசிஐடி போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலைய 9-வது பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் அடையாளம் தெரியாத 2 பேர் கையில் சிவப்பு பையுடன் அதில் ஏறுகின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறங்குகின்றனர். அப்போது அவர்களிடம் அந்தப் பை இல்லை. அடுத்த சில நிமிடங்களில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் குண்டு வெடிக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் எஸ்-5 பெட்டியின் மிக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி யுள்ளன.

குண்டுகளை வைத்தபின், அந்த சிவப்பு பையை தண்டவாளம் அருகிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். குண்டு வெடித்த பின்னர் சோதனைக்காக அழைத்து வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய், அந்த பையை கண்டுபிடித்து கவ்வி எடுத்து போலீஸாரிடம் கொடுத்தது. அந்த பையில் வெடிமருந்து வாடை அடித்ததால்தான் அதை மோப்ப நாய் கவ்வி எடுத்துள்ளது. பையில் சோதனை செய்த போலீஸார், வெடிமருந்து துகள்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹிர் உசேன், அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே, ஜாஹிர் உசேன் கைதுக்கும் இரட்டை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நம்புகின்றனர். எனவே, தமிழகத்தை குறிவைத்துதான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஜெயின் மகளிர் கல்லூரி, ஆவடி ரயில் நிலையங்களுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால், மக்களிடையே பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்பது தெரிந்தது. ஆனாலும், தீவிரவாதிகள் மிகப்பெரிய சதித்திட்டத்துடன் சென்னையை குறிவைத்து தங்கள் வேலையை தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸ் அதிகாரிகளிடம் வலுத்து வருகிறது. இதையடுத்து, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'ரயிலில் இருந்து இறங்கி ஓடிய நபரை தேடிவருகிறோம்'

குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஓடிய நபரை தேடிவருகிறோம் என்று சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "சென்ட்ரலுக்கு வந்த குவாஹாட்டி ரயிலில் வெடித்தது டைமர் வகையிலான வெடிகுண்டாக இருக்கலாம். காலை 5.40-க்கு வர வேண்டிய ரயில் 7.10-க்கு சென்ட்ரல் வந்துள்ளது. இந்த ரயில் சரியான நேரத்துக்கு வந்திருந்தால் ஆந்திராவில்தான் குண்டு வெடித்திருக்கும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இருந்து குண்டு வெடிக்கும் காட்சிகள் கிடைத்துள்ளன.

குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் உசேனுக்கும் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்றார்.

அதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான குண்டு வெடிப்பு காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x