Published : 16 May 2015 08:11 AM
Last Updated : 16 May 2015 08:11 AM

வாகனங்களுக்கு புகை சான்று வழங்குவதில் முறைகேடு: விவரங்கள் இணையதளத்தில் பதிவு - புகை மதிப்பிடும் மையங்களுக்கு அரசு உத்தரவு

தனியார் மையங்கள் முறைகேடாக புகை சான்று வழங்குவது உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வழங்கப்படும் சான்றுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தர விட்டுள்ளது.

வாகனப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த கடந்த 1988-ல் உருவாக்கப்பட்ட மத்திய மோட்டார் வாகனச் சட்டத் தில், வாகனங்களுக்கு புகை சான்று கட்டாயம் என்ற அம்சம் சேர்க்கப் பட்டது. புகை தொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் இதுவரை 5 முறை திருத்தியமைக்கப்பட்டுள் ளது. தற்போதைய நிலவரப்படி புதிய வாகனங்கள் புகை சான்று பெற்றால் ஓராண்டு வரை செல்லும். அதன் பின்னர் 6 மாதங்களுக்கு ஒரு முறை புகை சான்று பெற வேண்டும். புகை சான்று இல்லாவிட்டால் முதல் குற்றத் துக்கு ரூ.1000, 2-வது குற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தற்போது புகை சான்று வழங்கும் பணியை போக்குவரத்துத்துறை தனியாரிடம் வழங்கியுள்ளது. அவ்வாறு தமிழகம் முழுவதும் 278 தனியார் புகை மதிப்பீடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் புகை சான்று வழங்க பைக்குகளுக்கு ரூ.30, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, பெரிய வாகனங்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

ஆனால் இந்த மையங்கள் மீது போக்குவரத்துத் துறையின் போதிய கண்காணிப்பு இல்லாத தால், முறைகேடாக சில மையங்கள் பைக்குகளை சோதனை யிடாமலேயே ரூ.100-க்கு புகை சான்று வழங்குவதாக பொது மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் அண்மையில் போலியான புகை சான்றுகள் பிடிபட்டன. அவ்வாறு முறைகேடாக புகை சான்று வழங்கிய 5 மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகை மதிப்பீட்டு மையங்களில் வழங்கப்படும் புகை சான்றுகள் தொடர்பான விவரங்களை எங்களது இணையதளத்தில் பதிவுசெய்ய உத்தரவிட்டிருக்கிறோம். இனி அவர்கள் வழங்கும் ஒவ்வொரு சான்று குறித்தும் எங்களுக்கு உடனுக்குடன் தகவல் கிடைத்து விடும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் யாராவது சான்றை கொடுத்தால், உடனே எங்களால் இணையதளம் மூலமாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலியாக சான்று வழங்குவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x