Published : 30 May 2015 02:24 PM
Last Updated : 30 May 2015 02:24 PM

இழப்பீடு வழங்காவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம்: சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்காவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் (பொறுப்பு) மு.அருணா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்தானம் முன்னிலை வகித்தார்.

கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமலிங்கம்:

சாயக்கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 2004-ல் உத்தரவிடப்பட்ட ரூ.6.36 கோடியில் ரூ.36 லட்சத்தை மட்டும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது இதில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. 2004ம் ஆண்டில் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் 2011-ல் நீதிமன்றம் செல்லும் வரை சாயப்பட்டறைகள் இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்தது. அதன்பின், நீதிமன்ற உத்தரவின்பேரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டன.

தற்போது பூஜ்ய கழிவு எனக்கூறி செயல்படும் சாயப்பட்டறைகள் 25,000 லிட்டருக்கு அனுமதி பெற்று, 3 லட்சம் லிட்டர் வரை பயன்படுத்துகின்றனர். மேலும், சாயக்கழிவை சாக்கடைகளில் வெளியேற்றுகின்றனர். இதனால் சாக்கடை கழிவு நீரின் டீடிஎஸ் 3,000, 4,000 என உள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்:

எந்தந்த நிறுவனங்களில் இருந்து சாயக்கழிவு வெளியேற்றப்படுகிறது என தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமலிங்கம்:

எந்த சாயப்பட்டறையில் இருந்து சாயக்கழிவு வெளியேறுகிறது என தெரிவித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மேலும், சாயப்பட்டறைகளை மிரட்டி பணம் பறிப்பதாகவும் அவதூறு உண்டாக்குகின்றனர்.

காவிரி, அமராவதி ஆறுகளிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவுக்குள் சாயப்பட்டறைகள் அனுமதி வழங்கக்கூடாது. ஆனால், விதிகளை மீறி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. சாயக்கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கும்வரை விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்காவிட்டாலும், தொடர்ந்து அமராவதி, காவிரி ஆறுகளில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டாலோ, விதிகளை மீறி சாயப்பட்டறைகள் செயல்பட்டாலோ கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தெரு, தெருவாக சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம்.

ஆட்சியர் (பொ) மு.அருணா:

கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து எந்தந்த சாயப்பட்டறைகள் விதிகளை மீறி செயல்படுகினறன. சாயக்கழிவை வெளியேற்றுகின்றன எனக் கண்டறிந்து ஜூன் 10-க்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x