Published : 25 May 2015 11:20 AM
Last Updated : 25 May 2015 11:20 AM

ரூ.1.5 கோடி செலவில் 16 அம்மா மருந்தகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 அம்மா மருந்தகங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "தமிழக மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் முன்முயற்சியாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கிடவும், இதற்காக 20 கோடி ரூபாய் மாநில விலை நிலைப்படுத்தும் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும், ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 26.6.2014 அன்று காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 அம்மா மருந்தகங்களைத் திறந்து வைத்தார்.

தற்போது தமிழகத்தில் 84 அம்மா மருந்தகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இம்மருந்தகங்களில் தரமான மருந்துகள் 15ரூ வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

26.6.2014 முதல் 16.5.2015 வரை 84 அம்மா மருந்தகங்கள் மூலம் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், வேலாண்டிபாளையம் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கீழ் வேலாண்டிபாளையத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொளிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்.

மொத்தம் 16 இடங்களில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அம்மா மருந்தகங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் முகம்மது நசிமுத்தின், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x