Published : 17 May 2015 11:22 AM
Last Updated : 17 May 2015 11:22 AM

தஞ்சை அருகே பூங்காவூரில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

சமண மதத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரரின் அரிய சிற்பம் ஒன்று தஞ்சை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் குடவாசல் வட்டம் எண்கண் அருகே உள்ளது பூங்காவூர். இங்கு தொல்லியல் வல்லுநரான குடவாயிற் சுந்தரவேலு மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட களப் பணியில், பன்னிரண்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வேங்கி சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குடவாயிற் சுந்தர வேலு ‘தி இந்து’விடம் கூறும்போது, “பூங்காவூர் கிராமத்தில் உள்ள குளத்தை பல வருடங்களுக்கு முன்பு தூர் வாரும்போது குளத்துக் குள் இந்தச் சிற்பம் இருந்ததாகவும் அதை எடுத்து குளக்கரையில் வைத்ததாகவும் ஊர்ப் பெரியவர் கள் சொல்கிறார்கள்.

தியான நிலையில் மகாவீரர்

எளிமையான 2 அடுக்கு பீடத்தின் மீது அர்த்த பரியங்காசனமிட்டு (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீது மறு காலை மடித்து வைத்து அமர்வது) யோக முத்திரையுடன் தியான நிலையில், அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது” என்று கூறி னார்.

இது மகாவீரர் சிற்பம் என்று எப்படி அறுதியிட்டுச் சொல்லமுடிகி றது? என்று அவரைக் கேட்டபோது, “12 மற்றும் 13-ம் நூற்றாண்டுகளில் தான் இந்தியாவின் தென் பகுதியில் சமணம் தழைத்திருந்தது. சம ணத்தை பரப்பியவர்கள் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் என்கிறது சமண வரலாறு. இதில் முதலாமவர் ஆதிநாதர். 23-வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர். 24-வது தீர்த்தங்கரர் தான் மகாவீரர். தமிழகத்தைப் பொறுத்தவரை பவுத்தத்துக்கு புத்தரும் சமணத்துக்கு மகாவீரரும் மட்டுமே மத குருக்களாக போற்றப்பட்டிருக்கிறார்கள்.

மகாவீரர் கோயில்

அதன்படி பார்க்கையில் சோழ நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 8 மகாவீரர் சிற்பங்களை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதற்கும் இந்த சிற்பத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பொதுவாக அமைதியை விரும்பும் சமணர்கள் பெரிய ஊர்களுக்கு அருகில் சோலைகள் அமைத்துத் தங்கி சமணத்தை பரப்பினார்கள். அப்படித்தான் எண்கண் ஊருக்கு அருகே பூங்காவூரில் சோலையில் தங்கி இருந்த சமணர்கள் அங்கே மகாவீரருக்கு கோயில் கட்டி வழிபட்டிருக்க வேண்டும். கால மாற்றத்தில், செங்கலால் எழுப்பப்பட்ட அந்தக் கோயில் அழிந்து போயிருக்கிறது. பிற்பாடு அந்த கிராமத்தில் இந்துக்களும் குடியேறி கோயில்களை எழுப்பி இருக்கிறார்கள்.

பூங்காவூரில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் கோயில்கள் இருந்திருக்கின்றன. அதில் ஒரு கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் இருந்து தான் இந்த மகாவீரர் சிற்பம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்தக் கோயில்களும் இடிந்து மண் மேடாகி விட்டன. இப்போது அந்த மண் மேட்டில் லட்சுமிநாராயணர் - அம்பாள் சிலைகளும் ஒரு சிவலிங்கமும் இருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன” என்றார் சுந்தரவேலு.

சுந்தரவேலு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x