Published : 20 May 2014 01:31 PM
Last Updated : 20 May 2014 01:31 PM
வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட அடையாள அட்டை தருவதற்கான பணிகளை விரை வில் தொடங்கவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் நிருபர்களை அவர் திங்கள் கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டதால், நான் ஏற்கெனவே சொன்னபடி வாக்கா ளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேற் கண்டவற்றுக்காக பொது மக்கள் விண்ணப்பித்தால் அதனை 45 நாட்களுக்குள் முடித்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலுக்கு முன்பு சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் மட்டும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பிப் போருக்கு வண்ண அடையாள அட்டை வழங்கலாமா என்று பரிசீலித்து வருகிறோம். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதை வழங்கலாம் என்று திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியிருந்தோம். அப்போது சில பிரச்சினைகளால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதனை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வண்ண புகைப்பட அடையாள அட்டையை அச்சிடுவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற் கான டெண்டர் விடப்பட்டது. அதனை விரைவில் இறுதி செய்வோம்.
தேர்தல் வழக்குகள்
நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 500 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. 300 வழக்குகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டு தண்டனை கிடைத்துள் ளன. ஆனால், அவற்றில் பெரும்பான்மையானவற்றில் தண்டனையாக அபராதமே விதிக் கப்பட்டுள்ளது. 200 வழக்குகள், குற்றம் நிரூபிக்கப்படாததால் கைவிடப்பட்டுள்ளன.
தேர்தல் செலவு
நாடாளுமன்ற தேர்தல் செலவுக் கணக்கினை வேட்பாளர்கள் ஒரு மாத காலத்துக்குள் செலுத்திவிட வேண்டும். ஜூன் 2-வது வாரத்தில் தேர்தல் செலவுக்கணக்குப் பார்வையாளர்கள் வந்து அதனை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அரசியல் கட்சிகளைப் பொருத்த வரையில் செலவுக் கணக்கை 3 மாதத்துக்குள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தால் போதுமானது.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT