Last Updated : 06 May, 2015 06:05 PM

 

Published : 06 May 2015 06:05 PM
Last Updated : 06 May 2015 06:05 PM

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வை

கோடை சீஸனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி செய்து பார்வையிட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தர வாய்ப் புள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கிய கோடை சீஸனை முன்னிட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்தவண்ணம் உள்ள னர். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் நாடு முழுவதும் இருந்து குடும்பத்துடன் வருவோ ரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் கடலின் இயற்கை எழிலை கண்டு ரசித்து வருகின்ற னர். கடந்த நவம்பர் இறுதியில் இருந்து ஜனவரி மாதம் வரையிலான சீஸனில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையை கண்டு கழித்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சில நாட்களில் படகு பயண டிக்கெட் கிடைக்காமல் 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்ததும் உண்டு.

ஜனவரி மாதம் வரையிலான அந்த சீஸனில் 20 லட்சத்துக்கும் மேலான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். சபரிமலை சீஸனும் சேர்ந்து வந்ததால் இவை நிகழ்ந்தது.

தற்போதைய கோடை சீஸனில் ஏப்ரல் மாதம் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறையை கண்டுகழித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

கப்பல் போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறும் போது, `ஏப்ரல் மாதத்தில் கோடைகால மாக இருந்தபோதும் அந்த காலகட்டத்தில் 15-ம் தேதிக்கு மேல்தான் அதிகமானோர் வருகை புரிந்தனர். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும் தலா 7 ஆயிரம் பேருக்கு மேல் விவேகானந்தர் பாறைக்கு சென்று வருகின்றனர். பிற நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை தான் வருகின்றனர். இவற்றிலும் செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களில் மிகவும் குறைவான பயணிகள் தான் படகு பயணம் மேற்கொள்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு மேல் விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்துள்ளனர். தற்போது டிக்கெட் எடுக்க பெரும்பாலானோர் காத்து நின்றாலும், டிக்கெட் கிடைக்காமல் யாரும் திரும்பி செல்லவில்லை.

விவேகானந்தர் பாறையில் ஒரு படகு ஆட்கள் ஏற்றி இறக்கும் நேரத்தில் பிற படகுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது படகு தளத்தை விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்பிரச்சினை அடுத்த சீஸனுக்குள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x