Published : 31 May 2014 01:30 PM
Last Updated : 31 May 2014 01:30 PM
தமிழகத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்: "கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி குறுவட்டம், செல்லஞ்சேரி மஜ்ரா பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் 18.2.2014 அன்று விவசாய நிலத்திற்கு செல்லும் போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராகப் பணி புரிந்து வந்த சைதாப்பேட்டை, திடீர் நகரைச் சேர்ந்த குட்டி 22.2.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நேரு நெடுஞ்சாலை அருகே துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், ராக்கியாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுராஜன் என்பவர் 23.2.2014 அன்று வெள்ளியங்காடு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வடுகங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பாபு 28.2.2014 அன்று ராணிப்பேட்டை, பிஞ்சி மஜ்ரா முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்,
சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகரைச் சேர்ந்த வேலு மகன் சிறுவன் வெங்கடேஷ் 1.3.2014 அன்று தெருவிளக்கு மின்கம்பம் அருகே சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சபாபதி மகன் மணிகண்டன் 1.3.2014 அன்று பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் நகரத்தைச் சேர்ந்த நாகப்பன் மகன் ராஜி என்கிற சுப்பிரமணி 3.3.2014 அன்று சின்ன காஞ்சிபுரம், டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரும்பு கம்பத்தின் மீது மோதியதில் அருகிலிருந்த மின்கம்பியின் மீது பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5.3.2014 அன்று மின்சார மோட்டார் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் சண்முகவடிவேல் மகன் சிறுவன் சரண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ் 17.3.2014 அன்று வயலில் பணி செய்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நாவலூர் கிராமத்தில் 18.3.2014 அன்று கட்டட வேலை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ஓமந்தூரார் என்பவர் அருகிலிருந்த உயர்மின் அழுத்தக் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT