Published : 16 May 2015 07:43 AM
Last Updated : 16 May 2015 07:43 AM
மூன்று ஆண்டுகளாகச் சரக்கு ஏற்றுமதியில் பின்னடைவை சந்தித்து வந்த சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் 5.2 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் ரூ.50 கோடி செயல்பாட்டு லாபம் கிடைத்துள்ளது.
நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவதாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரைப் பகுதியில் 1639-ம் ஆண்டு கப்பல் மூலம் வணிகப் போக்குவரத்து தொடங்கியது. இதற்காக, 1861-ம் ஆண்டு சிறிய அளவிலான துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால், 1868 மற்றும் 1872-ம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக இத்துறைமுகம் சேதம் அடைந்தது. இதையடுத்து, 1881-ம் ஆண்டு செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று இத்துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 6.1 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. எனினும், தனியார் துறைமுகங்களின் வருகையால் சென்னை துறைமுகத்தின் சரக்கு ஏற்றுமதி வளர்ச்சி குறையத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் 5.2 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக சென்னை துறைமுகம் திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக சரக்குகள் கையாளுவதில் சற்று பின்னடைவை சந்தித்தது. தனியார் துறைமுகங்களின் வருகையே இதற்குக் காரணம்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது மற்றும் கார்கள் ஏற்றுமதி காமராஜ் துறைமுகத்துக்கு மாறியது ஆகியவையும் முக்கிய காரணங்களாக திகழ்ந்தன.
இவ்வளவு பிரச்சினைகளையும் சமாளித்து, சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 5.4 கோடி டன்னில், 5.2 டன் சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், 2.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து செயல்பாட்டு லாபம் ரூ.50 கோடி கிடைத்துள்ளது. இது எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 6.2 கோடி டன் சரக்கு ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT