Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

தேனி செல்லும் ஆரூணை வரவேற்க ஆயிரம் கார்கள்?

இன்று தேனி தொகுதிக்கு வரவிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணை வரவேற்க ஆயிரம் கார்களில் காங்கிரஸாரை திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தேனி தொகுதியில் கடந்த இரண்டு முறை வெற்றிபெற்ற ஜே.எம். ஆரூணையே இந்தமுறையும் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது காங்கிரஸ்.

ஏற்கெனவே, தேனி தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்துப் பேசிய ஆரூண், “திமுக-வுக்கு வாக்களித்தால் அவர்களும் நாளைக்கு பாஜக-வை ஆதரிக்கக் கூடிய நிலைப்பாட்டை எடுக்கலாம். எனவே, பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்’’ என்று பிரச்சாரம் செய்து முடித்துவிட்டார்.

இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக நாளை காலையில் தேனி தொகுதிக்கு வருகிறார் ஆரூண். அவரது வருகையை பிரம்மாண்டப்படுத்த திட்டமிட்டிருக்கும் விசுவாசிகள், ஆரூணுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக ஆயிரம் கார்களை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

தொகுதி எல்லையான வத்தலக்குண்டு காட்டு ரோட்டிலிருந்து தொகுதியின் இன்னொரு எல்லையான கூடலூர் வரை ஆரூணை ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு தலைக்கு 300 ரூபாயும் இதர கவனிப்புகளும் உண்டாம்.

இதற்கான பொறுப்புகளை அந்தந்த வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் கொடுத்திருக்கிறாராம் ஆரூண். ஆயிரம் கார்கள் ஆரூணை பின்தொடரும் பட்சத்தில் அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கைப் பதிவு செய்வதற்கும் தேர்தல் பார்வையாளர்கள் தயாராய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x