Published : 09 May 2014 08:39 AM
Last Updated : 09 May 2014 08:39 AM

கோமாவில் இருக்கும் மனைவியை கருணைக் கொலை செய்யக் கோரி மனு: முதல்வர் தனிப் பிரிவில் கணவர் பரிதாப வேண்டுகோள்

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட தனது மனைவியை கருணைக் கொலை செய்யக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் கணவர் மனு கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் அவர் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

முதல்வர் காப்பீட்டுத் திட்டம்

எனது மனைவி சீதாலட்சுமிக்கு (31), டான்சில்ஸ் பிரச்சினை இருந்தது. அதற்காக குழித்துறை அரசுப் பொதுமருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவைச் சிகிச்சையின்போது அவரது மூளைக்குச் செல்லும் நரம்பு தவறுதலாக துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த கடிதம் கூட ஒரு வெள்ளைத்தாளில்தான் இருந்தது. மருத்துவமனை மற்றும் டாக்டரின் பெயர்கூட அதில் எழுதப்படவில்லை.

திருவனந்தபுரத்தில் சில நாட்கள் சிகிச்சை பெற்றும் முன்னேற்றம் இல்லாததால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் என் மனைவியைச் சேர்த்தேன். அப்போது எனது மனைவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதைத் தொடர்ந்து சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவியை சேர்க்க உத்தரவிடப்பட்டது. சென்னை அரசு மருத்துவமனையில் சில நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றும் முன்னேற்றம் இல்லை.

பணம் இல்லாததால்

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான், ரூ.60 ஆயிரம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் மனைவியை சேர்த்தேன். இப்போது ரூ.3.5 லட்சம் வரை கடனாகிவிட்டது. மனைவியும் கோமாவில் உள்ளார். எனது 6 வயது மற்றும் 8 வயது மகன்களை பார்த்து 3 மாதங்களாகிவிட்டன. மனைவியை இப்படியே வீட்டுக்கு கொண்டுசெல்லுமாறு கூறுகின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை ஏழையான என்னால் அவரை வைத்துப் பராமரிக்க முடியாது.

கருணைக் கொலை

அரசு மருத்துவமனையில் நேர்ந்த தவறு என்பதால், அவரை மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், அவரை கருணைக் கொலையாவது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதைத்தான் எனது மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு சுப்பிரமணியம் கண்ணீர் மல்க கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x