Published : 29 May 2015 10:27 AM
Last Updated : 29 May 2015 10:27 AM

பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள்

பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருப்பதைப் போன்ற 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் கோம்பைக்காடு பளியர் மலைக்கிராமம் உள்ளது. இந்த பழங்குடி மலைக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலைக்கிராம பகுதிகளில் பழநி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, வாஞ்சிநாதன் ஆகியோர் பாறை ஓவியங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பழங்குடி பளியர் மக்கள் வரைந்த தொல் பழங்கால ஓவியங்களை கண்டனர். நவீன தொல்லியல் ஆய்வு நெறிமுறைகள்படி இந்த கோம்பைக்காடு பாறை ஓவியங்கள் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளது.

பழநி-கொடைக்கானல் சாலையில் ஒரு பொடங்கில் (குகை போன்ற அமைப்பு) இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ரத்த சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் நிறம் மங்கி தற்போது செங்காவி நிறத்தில் காணப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் மழை, வெயிலில் சிதலமடைந்து அழியும் நிலையில் உள்ளன. மற்றவை முற்றிலும் அழிந்துவிட்டன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:

‘‘ஒரு ஓவியத்தில் ஒரு விலங்கின் மேல் இரு மனிதர்கள் அமர்ந்திருக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் அழியும்தருவாயில் உள்ளது. மற்றொரு ஓவியத்தில் ஒரு மனிதன் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியமும் அழிந்த நிலையில் காணப்படுகிறது.

இன்னொரு ஓவியத்தில் ஒரு மனிதன் வலது கையில் ஒரு கைக்கோடாரியை ஏந்திய நிலையில் உள்ளான். இந்த மனிதன் காலடியில் ஒரு மனிதன் வீழ்ந்து கிடப்பதைப்போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. போரில் எதிரியை வீழ்த்தி வெற்றிக் கொடி ஏந்தியதை இந்த ஓவியம் குறிப்பிடுகிறது.

மற்றொரு ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மிக முக்கியமானது. சூலம் என்பது சைவ வழிபாடு தொடர்பான சின்னமாகும். இவ்வகை சூல ஓவியங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் உள்ளன.

தற்போதுவரை ஊரின் எல்லை யில் சூலக்கல் நடும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. இந்த ஓவியம் பழங்குடி மக்களின் பாதுகாப்பு சடங்கை குறிப்பிடுவதற்காக வரையப்பட்டுள் ளது. மற்றொரு ஓவியம் ஒரு மனிதனின் கை ஓவியமாகும்.

இதில் இரு வகையான கை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஒரு கை ஓவியம் கைபோன்ற அமைப்பில் அச்சாக வரையப் பட்டுள்ளது. அதாவது, செங்காவி குழம்பில் கையைத் தோய்த்து அதை பாறையில் அச்சு பதிக்கும்விதமாக அழுத்தி எடுக்கப்பட்டுள்ளது. வேறு ஓவியத்தில் பாறையில் கையை வைத்து, அதை சுற்றி கோடுகள் வரைந்து கை ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த கை ஓவியங்களை தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பிரான்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காண இயலும். இதன் மூலம், தமிழர்கள் உலகம் முழுவதும் ஒருவருக்கொருவர் தொடர்புடன் வாழ்ந்ததை இந்த ஓவியங்கள் உணர்த்துகின்றன. பழங்குடி இன மக்களின் இந்த சிந்தனை ஓவியங்களைப் பாதுகாக்க தொல் லியல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x