Published : 30 May 2015 03:29 PM
Last Updated : 30 May 2015 03:29 PM

திற்பரப்பு அருகில் அழகு மிளிரும் அருவிக்கரை: சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை தேவை

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமே இல்லை. பத்மநாபபுரம் அரண்மனை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், சிதறால் மலைக்கோவில் என ரம்மியமான பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

அந்த வகையில் திருவட்டாறு காங்கரை சந்திப்பில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் வழியில் உள்ள அருவிக்கரை சிறுநீர்வீழ்ச்சி சமீபகாலமாக மக்களிடையே பிரபலமாகி வருகிறது. காமராசு, வருஷம் 16, ராமன் தேடிய சீதை, நீ வருவாய் என உட்பட பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள இந்த அருவி பரளையாற்றின் குறுக்கே உள்ளது. மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ்பகுதியில் ஓடும் ஆறுதான் இங்கே சிறிய அருவியாக கொட்டுகிறது.

சுற்றிலும் பெரிய பெரிய பாறைப் பரப்புகள் நடுவே இந்த அருவி அமைந்துள்ளது. அருவியின் கீழ்ப்பகுதியில் சுமார் ஆறு அடி ஆழம் கொண்ட தடாகத்தில் அருவி விழுகிறது.

குறைந்த அளவு தண்ணீரே தடாகப் பகுதியில் உள்ளதால், அதில் இறங்கி ஆசை தீர சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். அருவியையொட்டி உள்ள பாறைகளில் சுவாமி சிற்பங்கள் காணப்படுகின்றன.

மேற்கு மாவட்ட இலக்கியவாதிகள் மாலை வேளைகளில் அவ்வப்போது இந்த அருவியின் எதிர்புறம் அமர்ந்து இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது உண்டு. அருவிக்கரை அருகே சப்த மாதர் கோயில் உள்ளது.

திருச்சியில் இருந்து சுற்றுலா வந்திருந்த சண்முகநாதன் கூறியதாவது, “முதன்முறையாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளேன். கன்னியாகுமரியில் முக்கியமான சுற்றுலா தலம் கடற்கரை பகுதி என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், இங்கே வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது. கன்னியாகுமரி மாவட்டம் எப்படிப்பட்ட எழில் சூழ்ந்த சொர்க்க பூமி என்பது. பச்சைப்பசேல் என பச்சைக்கம்பள்ம் விரித்ததுபோல் இருக்கிறது. ஏனைய சுற்றுலா தலங்களை விட அருவிக்கரைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதமான அருவித்தண்ணீர். திற்பரப்பில் குளித்த பின், இங்கு வந்து ஆசை தீர குளித்து மகிழ்ந்தோம். ஆனால் அருவிக்கரை கோயில் அருகில் இருந்து அருவிக்கு வருவதற்கு சரியான பாதைகள் இல்லாததால் பாறைகளில் தாவித்தாவி மிகவும் சிரமப்பட்டே வர வேண்டியிருந்தது” என்றார்.

அருவிக்கரை ஊராட்சித் தலைவர் ஜான் கிறிஸ்டோபரிடம் கேட்டபோது, “அருவிக்கரை கோயில் அருகில் இருந்து அருவிக்கரை வரை உள்ள இடத்துக்குச் செல்ல பாதை வசதி செய்வது பற்றி மன்றக் கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். தற்போது அருவிக்கரையில் இருந்து அணைக்கரைக்கு செல்வதற்கு புதிதாக பாலம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த வேலை முடிவடைந்ததும் இங்கு பாதை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்” என்றார்.

பாதை, குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்தால், இந்த அருவிக்கரையும் மக்கள் விரும்பும் முக்கிய சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x