Published : 18 May 2015 10:03 AM
Last Updated : 18 May 2015 10:03 AM

ஏழிசை மன்னர் எம்.கே.டி. அறிமுகம் செய்த திருச்சி ரசிக ரஞ்சன சபா: நூறாண்டு கலைச் சேவை கொண்டாட்டம்

திருச்சி ரசிக ரஞ்சன சபாவின் நூறாண்டு கலைச் சேவையை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்த அதன் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருச்சியில் இயல், இசை, நாடகம் என அனைத்துக் கலைகளை யும் வளர்க்கும் வகையிலும், கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வந்த எப்.ஜி.நடேச அய்யரை நிறுவனராகவும் தேசி காச்சாரியார், பெத்தாச்சி செட்டி யார், கொடியாலம் சீனிவாச ஐயங் கார், அனந்தராமய்யர், சண்முகசுந் தரம் ஆகியோரை செயற்குழு உறுப்பினர்களாகவும் கொண்டு ரசிக ரஞ்சன சபா 1914-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அந்தக் காலத்தில் பல்வேறு முன்னணி நாடகக் கலைஞர்களைக் கொண்டு நாடக நிகழ்ச்சிகளை நடத்தவும், சொந்தமாக நாடகக் குழுவை வைத்து பல்வேறு ஊர்களில் நாடகங்களை நடத்தவும் இந்த சபாவை தொடங்கினார் எப்.ஜி.என் என்று அழைக்கப்படும் எப்.ஜி.நடேச அய்யர். இந்த சபா தொடங்கப்பட்டதும் உலகப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த ஆண்டி லேயே 5 நாடகங்கள் நடத்தப்பட்டு, நிதி வழங்கப்பட்டது.

ஏழிசை மன்னர் என்று கலை உலகத்தால் போற்றப்படுவதற்கு முன்பு 10 வயதே நிரம்பியிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதரை, எப்.ஜி.நடேச அய்யர், அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் கதாபாத் திரத்தில் நடிக்கச் செய்தார். அதன் பிறகே முறையான நாடகப் பயிற்சி பெற்று திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக எம்.கே.டி. திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி, ஆர்.எஸ்.மனோகர்

1931-ம் ஆண்டில் சங்கங்கள் சட்டத்தின் கீழ் இந்த சபா பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. இந்த சபாவில் ஆர்.எஸ்.மனோகர் நடித்த புராண நாடகங்கள் 10 நாட்கள் வரை நடத் தப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் இங்கு தங்கப் பதக்கம் நாடகத்தில் நடித் துள்ளார்.

1940-ம் ஆண்டுக்குப் பிறகு நாடகம் மட்டுமன்றி நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் சபா நடத்தி வருகிறது. இவற்றில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, செம்மங்குடி சீனிவாச அய்யர், மதுரை மணி அய்யர், ஜேசுதாஸ், பத்மா சுப்பிர மணியம் ஆகியோரைத் தொடர்ந்து இளம் கலைஞர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை இங்கு நடத்தியுள்ளனர்.

எஸ்.வி.சேகர், சோ

1974-ம் ஆண்டு முதல் மேலரண் சாலையில் புதிய அரங்கில் சபா செயல்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறை நாடகக் கலைஞர்களான எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, சோ, திரைப்பட நடிகர்கள் சிவக்குமார், மனோரமா, லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்ற நாடகங்களும் இங்கு நடத்தப் பட்டுள்ளன. 1990-ம் ஆண்டு வரையில் சபா சார்பில் சொந்தமாக நாடகக்குழு செயல்பட்டு வந்தது.

குறும்படங்கள் திரையிடல்

ரசிக ரஞ்சன சபாவின் செய லாளர் என்.சேகர் ‘தி இந்து’விடம் கூறியபோது, “இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஊக்குவிக் கும் வகையில் இந்த சபா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப் போட்டிகளையும் நடத்தி வருகிறோம். தற்போது சிறந்த குறும்படங்களை திரையிடுவதுடன், அதன் இயக்குநரை அழைத்து குழு விவாதங்களையும் நடத்தி வருகிறோம்.

சபாவின் நூற்றாண்டைக் கொண் டாடும் வகையில் 2016-ம் ஆண்டு மார்ச் வரை 100 நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் தொடக்க நிகழ்ச்சி மே 16-ம் தேதி நடந்தது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டது.

சபா தொடங்கப்பட்டதன் நோக்கத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x