Published : 29 May 2015 01:54 PM
Last Updated : 29 May 2015 01:54 PM

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: அன்புமணி

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மக்கள் தாகத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சென்னையில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு ஒரு குடம் ரூ.5 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கடந்த இரு ஆண்டுகளாகவே மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையும், ஆண்டுக்கு சில மாதங்கள் கிடைக்கும் கிருஷ்ணா நீரும் தான் சென்னையின் தேவையை ஓரளவாவது நிறைவேற்றி வருகின்றன.

சென்னையில் எந்த நேரமும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை உணர்ந்து அதை சமாளிப்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியமும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வேலுமணியும் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அமைச்சரோ குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா செல்லும் வழிகளில் அதிக வரவேற்பு பதாகைகளை வைப்பது யார்? என்ற போட்டியில் மற்ற அமைச்சர்களை தோற்கடித்து, 100 இடங்களில் பதாகைகளை அமைக்க சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி ஆகிய 4 நீர்த்தேக்கங்கள் தான் நிறைவேற்றி வருகின்றன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். ஆனால், இப்போது இவற்றில் வெறும் 1.743 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

இது மொத்தக் கொள்ளளவில் 15% மட்டுமே. சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. பூண்டி ஏரியின் நீர் அளவு 0.105 டி.எம்.சியாக குறைந்து விட்டதால் இனி இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. புழல் ஏரியில் ஒரு டி.எம்.சியும், செம்பரம்பாக்கம் ஏரியில் அரை டி.எம்.சியும் தண்ணீர் இருப்பதால் அதைக் கொண்டு தான் சென்னைக்கு அவ்வப்போது சிறிதளவு வழங்கப்பட்டு வருகிறது.

இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குக் கூட குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க முடியாது எனும் நிலையில், குடிநீர் தட்டுப்பட்டை போக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள், வீராணம் ஏரி ஆகியவற்றின் மூலம் ஓரளவு தண்ணீர் கிடைக்கும் போதிலும், சென்னையின் குடிநீர் தேவையை ஒப்பிடும்போது அவை யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே இருக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சென்னை மாநகரம் முழுவதுமே குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது.

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக இடைத்தேர்தல் நடத்தப்படும் இராதாகிருஷ்ணன் தொகுதியில் அடுத்த மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அங்கு தாராளமாக தண்ணீர் வழங்க வசதியாக மற்ற பகுதிகளுக்கான தண்ணீரின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் சென்னை மாநகர மக்கள் அவதிப்படுகின்றனர்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 20 லிட்டர் மினரல் குடிநீர் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைந்த நிலையில், அம்மா குடிநீர் ஒரு லிட்டர் ரூ.10 என்ற விலையிலும், குழம்பிய தண்ணீர் ஒரு குடம் ரூ.5 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுவது தான் அ.தி.மு.க. அரசின் அவல சாதனையாக உள்ளது.

சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தின் தீவிரத்தை உணர்ந்து ஆந்திர அரசிடம் பேசி, நடப்பாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரில் இதுவரை வழங்கப்பட்டது போக மீதமுள்ள தண்ணீரை பெறுவது, தமிழகத்தில் வாய்ப்புள்ள இடங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து வினியோகிப்பது ஆகியவை தான் இப்பிரச்சினைக்கான தற்காலிகத் தீர்வுகள் ஆகும்.

இவற்றை உடனடியாக மேற்கொண்டு சென்னை மக்கள் தாகத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x