Published : 30 May 2015 02:33 PM
Last Updated : 30 May 2015 02:33 PM

நகை ஏலத்தைக் கண்டித்து தஞ்சை ஆட்சியரிடம் தாலியை ஒப்படைக்க முயன்ற விவசாயிகள்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

வங்கிகளில் அடகுவைத்த நகைகளை ஏலம் விடுவதைக் கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியரிடம் விவசாயிகள் தாலியை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு, ஆட்சியர் என்.சுப்பையன் தலைமை வகித்தார்.

கூட்டம் தொடங்கியவுடன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு, “காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வறட்சி, மழையால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகுவைத்த நகைகளை ஏலம் விடுகின்றனர். தாலி மட்டுமே மிஞ்சியுள்ளது. பலமுறை போராட்டம் நடத்தியும் பலனில்லை” என்று முறையிட்டனர். மேலும், ஆட்சியரிடம் தாலியை ஒப்படைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், விவசாயிகளுக்கு ஆட்சியர் பதில் அளிக்காததால், அவரைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

வெண்டாக்கோட்டை வா.வீரசேனன்:

மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியின் முக்கிய நீராதாரமான கல்யாண ஓடை வாய்க்காலின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறை பாலம் கட்டுகிறது. இதனால், மேட்டூர் அணை திறந்தாலும், வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன் விவசாயிகளின் கருத்துகேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

புனல்வாசல் வி.ஏ.சவரிமுத்து:

கொப்பரை தேங்காயை கிலோ ரூ.200-க்கு கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்.

விவசாயிகள் சங்க நிர்வாகி சாமி.நடராஜன்:

கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரைப் பெற்று, ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெ. ஜீவக்குமார்:

திடீர் கோடைமழையால் எள் விலை சரிந்துள்ளது. எனவே, எள்ளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும்.

மதுக்கூர் ஏ.பி.சந்திரன்:

மதுக்கூர், கீழக்குறிச்சி, சிரமேல்குடியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பி.கோவிந்தராஜ்:

குருங்குளம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2016-17 அரைவைப் பருவத்துக்குள் இணை மின் நிலையம், ஆலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும்.

இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x