Published : 28 May 2015 10:35 AM
Last Updated : 28 May 2015 10:35 AM
கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகவும், இலக்கிய தளத்தில் குறிப்பிடத்தக்க படைப் பாளியாகவும், இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் மேடைப் பேச்சாளராகவும் பன்முகம் காட்டிவரு பவர் சென்னிமலை தண்டபாணி.
ஏழு அண்ணன்கள், ஒரு அக்கா கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாய் பிறந்தவர். 6 மாதக் குழந்தையாக இருந்த போது, இளம்பிள்ளை வாதத்தால் 2 கால்களும் செயலிழந்தன. 6 வயதில் தந்தை இறந்துவிட, பெரிய அண்ணனின் உதவியோடு படித்து, இன்றைக்கு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். ‘மனதில் உறுதியோடும், தெளிந்த எண்ணங் களோடும் இலக்கு நோக்கிப் பயணித்தால் வெற்றி வசப்படும்’ என்பதையே தன் வாழ்வியல் மந்திரமாக கொண்டுள்ள கவிஞர் சென்னிமலை தண்டபாணி தனது அனுபவத்தை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொள்கிறார்..
‘‘பிறந்தது படித்தது எல்லாமே ஈரோடு மாவட்டம் சென்னிமலை. புத்தக வாசிப்பு என்பது சிறுவயதிலேயே எனக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. அப்போதே கவிதைகளும் எழுதுவேன். பாவேந்தர் பாரதிதாசனையும், வங்கக்கவி தாகூரையும் படித்த பின்னால், சந்தத்தோடு கூடிய இசைப்பாடல் களையும் எழுதத் தொடங்கினேன்.
படிக்காத நேரம் போக மற்ற நேரங்களில் வானொலி கேட்பது வழக்கம். முன்பெல்லாம் கோவை வானொலியில் அடிக்கடி கவிஞர்கள் சிற்பி, புவியரசு எழுதின கால் மணிநேரச் சிந்தனைகளை ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்டுஉந்துதல் பெற்று வானொலி நாடகங்கள் எழுதத் தொடங்கினேன்.
என் எழுத்து முயற்சியில் புத்தர், மகாவீரர் பற்றிய 2 நாடகங்களும் புதிய அனுபவத்தைத் தந்தவை. அவர்களது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு வானொலிக் காக எழுதப்பட்ட தொடர் நாடகங் கள், பிறகு நூல்களாகவும் வந்து பரவலான பாராட்டைப் பெற்றன.
நான் பெரியாரிய சிந்தனைகளில் ஈடுபாடு உடையவன். சிவானந் தரின் வாழ்க்கை நிகழ்வு களை கவிதை நாடகமாக எழுத முடிந்தது எப்படி என்று கேட்கிறார்கள்.
குருதேவர் சிவானந்தரும் பெரியாரும் என் இரு கண்களைப் போன்றவர்கள். என் சிந்தனை வளர்ச்சிக்கு பெரியார் நீர் ஊற்றி னார் என்றால், என் வாழ்வியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் குருதே வர். இருவரிடம் இருந்தும் நான் கற்றவை அதிகம். அவர்கள் இருவரும் என்னைச் செதுக்கிய மகா சக்திகள்.
நீ எந்த அளவுக்கு உயரமாகச் செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவுக்கு நீ சிரமப்பட்டாக வேண் டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இன்றைய சமுதாயத்தில் இளை ஞர்கள் நம்பிக்கையோடு இருக் கிறார்கள். ஆனால், தொடர் முயற்சி கிடையாது. தொடர்ந்து முயற்சிப் பதில் தயக்கம் கூடாது. பல இடங்களில் சிறுசிறு குழிகள் தோண்டு வதில் பயனில்லை. ஒரே இடத்தில் தொடர்ந்து தோண்டினால்தான் கிணறு உருவாகும். நீர் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறது. அதை நாம் நம்பிக் கையோடு எதிர்கொள்ள வேண்டும். ‘ஒரு குரு, ஓர் இலக்கு, ஓர் இடம்’ என்பதை மனதில் வைத்து செயலில் இறங்கினால், வெற்றியை எட்டிப் பிடிக்கலாம்...’’ என உற்சாகமாகக் கூறுகிறார் கவி ஞர் சென்னிமலை தண்டபாணி.
‘வசந்தம் உனது வாசலில்’, ‘உன் கண்களும் என் கவிதைகளும்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்
பின் பெயர்களும், ‘வெளிச்சத்தின் பாதை’, ‘பண்படுத்தும் எண்ணங் கள்’ என்கிற வாழ்வியல் வழிகாட்டும் நூல்களும் இவரை தனித்து அடை யாளம் காட்டுகின்றன.
18க்கும் மேற்பட்ட நூல்கள், அதற்கென பெங்களூரு தமிழ்ச்சங்கம், சிற்பி இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகள், இளைஞர் கள், மாணவர்களுக்கான நல்வழி காட்டும் மேடைப் பேச்சுகள்என இவரது பயணம் சலனமின்றி ஓடுகிறது. இவரது 3-வது மூத்த சகோதரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT