Published : 27 May 2015 01:31 PM
Last Updated : 27 May 2015 01:31 PM
கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 10 பெண்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி நேற்று 12 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் செந்தில்(38) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் கண்டெக்டர் முருகன் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இதே போல் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணமலை நோக்கி மற்றொரு அரசு பேருந்து சென்றது. இப்பேருந்தை ஓட்டுநர் கவியரசு(39) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பேருந்தில் கண்டெக்டர் கார்த்திகேயன் உட்பட 40-க்கும் மேற்பட்டவ பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் இரு பேருந்துகளும் கிருஷ்ணகிரி அடுத்த மேச்சேரி நகர் பகுதியில் சென்ற போது, குண்டும் குழியுமான சாலையில் இறங்கி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (52) படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துநர் முருகன் படுகாயம் அடைந்தனர்.
மற்றும் இரு பேருந்தகளில் பயணம் செய்த 30 ஆண்கள், 10 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 42 பேர் லேசானது முதல் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செந்தில்குமார், முருகன் ஆகியோர் மேல்சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழுதான திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்:
கிருஷ்ணகிரியிலிருந்து திண்டிவனத்திற்கு செல்லும் சாலை ஆண்டுகள் பல கடந்தும் சீர் செய்யப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் வாகனங்களை ஒட்டிச் செல்கின்றன்.
கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.66) போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
இந்த சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மருவத்து£ர், பாண்டிச்சேரிக்கு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வழியாக திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் செல்கின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற முடிவு செய்து, பல ஆண்டுகள் கடந்தும் சீர் செய்யப்படாததால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
விபத்துகளை தவிர்க்க உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT