Published : 05 May 2014 10:34 AM
Last Updated : 05 May 2014 10:34 AM
தமிழுக்குத் தொண்டாற்றிய மாமேதை கால்டுவெல்லின் 200-வது பிறந்த நாளில், அவரை நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கால்டுவெல், 1838-ல் தமது 24-ம் வயதில் மதபோதகராக சென்னைக்கு வந்தார். 1841-ல் நெல்லை பேராயராகப் பொறுப் பேற்று இடையன்குடி என்னும் ஊரில் தங்கி, தமிழ் மொழியை செம்மையாகக் கற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 18 மொழிகளைக் கற்றவராக விளங்கினார்.
அம்மொழிகளுக்குள் உயர்ந்து விளங்கிய தமிழ் மொழியின் தனித்தன்மையைக் கண்டு வியந்தார். ‘திராவிட மொழிகள்’ என்னும் சொல்லாக்கத்தை முதன் முதலாக உருவாக்கி உலகுக்குத் தந்தார். அத்துடன், திராவிட மொழிகளுக்கிடையே பின்னிப் பிணைந்து கிடந்த உறவுகளை, ஒப்புமைகளைத் தெளிவுபடுத்தி, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம்’ என்ற உயர்பெரும் நூலைப் படைத்தார். அது தமிழர் களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும் அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தமிழ்ச் சொற்கள், செம்மொழி களான கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் இடம் பெற்றுள்ளன எனவும், தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் எனவும், இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் முதலில் கூறியவர் கார்டுவெல்.
தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்து பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளிபெறச் செய்ததால் கால்டு வெல் பெருமகனாரைத் தமிழ் உலகம் என்றும் போற்றக் கடமைப் பட்டுள்ளது. அவருக்கு சென்னை கடற்கரையில் சிலை அமைத்தோம். சிறப்பு அஞ்சல்தலையை மத்திய அரசு வெளியிடச் செய்தோம். கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லத்தை நினைவகம் ஆக்கினோம்,
அறிஞர் கால்டுவெல், 53 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளால் உலகம் முழுவதும் புகழப்படுகின்ற அந்த மாமேதை பிறந்த 200-ம் ஆண்டு, வரும் 7-ம் தேதியுடன் நிறைவுபெறும் வேளையில் அப்பெருமகனாரை ஒட்டுமொத்த உலகத் தமிழ்ச் சமுதாயம் சார்பில் நன்றியுடன் நினைந்து வணங்கி மகிழ வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT