Published : 26 May 2015 01:22 PM
Last Updated : 26 May 2015 01:22 PM

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு விழிப்புணர்வு குறைவு: காந்திகிராமம் பல்கலை. ஆய்வில் தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவாக இருப்பதாக, திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வு மத்திய அரசு நிர்வாகத்தில் பங்கேற்கும் தகுதியை தீர்மானிக்கும் முக்கி யமான தேர்வாகும். இத் தேர்வில் பங்கேற்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் பயிற்சி மையங்கள் உள்ளன.

பின்தங்கிய தமிழகம்

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஐஏஎஸ் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் குறைவாகவே தேர்ச்சி அடைகின்றனர். இதற்குக் காரணம் பள்ளிகளிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாததும், வரலாறு, பொதுஅறிவு பாடங்களுக்கு முக்கியத்துவம் தராததும் தான் என காந்திகிராமம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜாகிதாபேகம் கூறியதாவது:

9-ம் வகுப்பு மாணவர்களிடையே ஐ.ஏ.எஸ். தேர்வை பற்றிய விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிய, பல்கலைக்கழக கல்வியியல் துறை சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 89 சதவீதம் மாணவ, மாணவிகள் மிகமிகக் குறைவான மதிப்பெண் பெற்றனர். 47 சதவீதம் பேர் 21-30 மதிப்பெண்களும், 30 சதவீதம் பேர் 31-40 மதிப்பெண்களும், 13 சதவீதம் பேர் 41-50 மதிப்பெண்களும் பெற்றனர். 5 சதவீதம் பேர் 51-60 மதிப்பெண்களும், 2 சதவீதம் பேர் 61-70 மதிப்பெண்களும் 2 சதவீதம் பேர் 71-80 மதிப்பெண்களும் 1 சதவீதம் பேர் தலா 81-90 மற்றும் 91-100 மதிப்பெண்களும் பெற்றனர். இதன் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வை பற்றிய செய்திகள் மற்றும் விழிப்புணர்வு கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மிகமிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விழிப்புணர்வு குறைவாக பெற்றிருந்தவர்களுக்கு ஒருவாரகாலத்துக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய செய்திகள், கல்வித்தகுதி, விண்ணப்பம் கிடைக்கும் இடம், தேர்வின் நிலைகள், உதவித்தொகை போன்ற தகவல்களும், ஐஏஎஸ்் தேர்வை எழுதுவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்புகள், பொது அறிவின் முக்கியத்துவம் பற்றிய வகுப்புகளும் நடத்தப்பட்டன.

அதன்பின், மீண்டும் அந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பற்றிய விழிப்புணர்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், அவர்களுக்கு 75 சதவீதத்திற்கு மேல் விழிப்புணர்வு அதிகரித்திருந்தது.

வரலாறு முக்கியம்

பள்ளிக் கல்வித்துறை மாணவர் களிடையே பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெறும் வகையில், முக்கி யமான தேர்வுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் உயர்நிலைப் பள்ளி களிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்தால், மாணவர்களின் வேலை நாட்டம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு மேல்நிலை வகுப்பில் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வாய்பை பெறுவர். மேலும் வரலாறு, அரசியல் பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்படுவதுடன், இளம் நிர்வாகிகளையும், அரசியல் வாதிகளையும் உருவாக்கி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

வேலை என்றாலே மருத்துவர், பொறியாளர், கணினி பொறியாளர் போன்றவற்றில் மட்டும் ஈடுபாடு கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு, வேளாண்மை, நிர்வாகம், அரசியல் போன்றவற்றில் ஈடுபாட்டினை அதிகரிக்க ஆசிரியர்கள் பள்ளிப் பருவத்திலேயே குறிப்பாக ஒன்பது, பத்தாம் வகுப்புகளிலேயே மாணவர்களுக்கு பணிகள் சார்ந்த அறிவுரைகளை வழங்குவது அவசியமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x