Last Updated : 30 Apr, 2015 01:02 PM

 

Published : 30 Apr 2015 01:02 PM
Last Updated : 30 Apr 2015 01:02 PM

முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

வேளாண் அதிகாரி முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோ ரது ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

நெல்லை வேளாண் உதவிப் பொறியாளர் முத்துக்குமாரசாமி பிப்.20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய தாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நெல்லை நீதிமன் றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி டிஎஸ்பி பிரபாகரனின் பதில் மனுவை கூடுதல் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறையில் ஓட்டுநர் பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு ஆட்சியர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஒப்புதல் வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட 7 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குமாறு நெல்லை வேளாண் பொறியியல் செயற் பொறியாளர் (பொறுப்பு) முத்துக்குமாரசாமிக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் 7 ஓட்டுநர்களிடமும் தலா ரூ.1.75 லட்சம் வசூலித்து கொடுக்கு மாறு முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் முத்துக்குமாரசாமி அவரது பி.எப். பணத்தில் ரூ.6 லட்சம் கடன் வாங்கினார். நண்பரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தூண்டுதல்பேரில் தலைமைப் பொறியாளர் செந்தில், முத்துக் குமாரசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாங்கள் கேட்ட பணத்தை தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும். ஓய்வுபெற விடமாட்டோம் என மிரட்டி வந்துள்ளார்.

இதனால், மன உளைச்சல் அடைந்த முத்துக் குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் முத்துக்குமார சாமியின் மனைவி அதிர்ச்சியில் இருந்ததால் ரயில்வே போலீஸாரி டம் சரியான தகவல்கள் வழங்க வில்லை. ஆனால், சிபிசிஐடி போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலமும், சாட்சிகளின் வாக்குமூலமும், தொலைபேசி பதிவுகளும் ஒத்துப்போகின்றன.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் நடத்திய விசாரணையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

தலா ரூ.1.75 லட்சம் லஞ்சம்

வேளாண் துறையில் ஓட்டுநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் லஞ்சம் நிர்ணயம் செய்தது அக்ரி கிருஷ்ண மூர்த்திதான். அப்பணத்தை செந்தில் வசூல் செய்துள்ளார். இதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் வேளாண் துறை கீழ்நிலை அதிகாரிகள் முக்கிய சாட்சியாக உள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் கூட்டு சதி செய்துள் ளனர். இதற்கு போதிய ஆதாரம் உள்ளது. இவர்களது நடவடிக்கை யால்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துள்ளார். விசா ரணை தற்போது முக்கிய கட்டத் தில் உள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது.

இந்த வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. இதுவரை 6 பேர் நீதித் துறை நடுவரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். இன்னும் 3 பேர் ரகசிய வாக்குமூலம் அளிக்க வேண்டியுள்ளது. ரகசிய வாக்குமூலத்தின் நகலை போலீ ஸார் இதுவரை பெறவில்லை.

கூடுதல் விசாரணைக்காக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில், தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமி ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் பதிவை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இருவரும் செல்வாக்கானவர்கள். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதி கே.கல்யாணசுந்தரம் தீர்ப்பு அளிக்கையில், இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த சூழலில் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x