Published : 26 May 2015 07:17 AM
Last Updated : 26 May 2015 07:17 AM
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பல்வேறு சில்லறை கடைகளில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஜாம்பஜார், வியாசர்பாடி மார்க்கெட்டுகளில் நேற்று கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ ரூ.10-க்கும் ஜாம்பஜார் போன்ற சில்லறை மார்க்கெட்டுகளில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, ஏப்ரலில் முறையே ரூ.25, ரூ.30 என உயர்ந்தது. அந்த விலை மே 17-ம் தேதி வரை நீடித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், ஜாம்பஜார், வியாசர்பாடி, கொடுங்கையூர் போன்ற சிறிய மார்க்கெட்டுகளில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி திடீர் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
இந்த மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து குறைவான அளவு தக்காளி வருகிறது. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வருகிறது. தக்காளியை பொருத்தவரை வெளி மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தினமும் 80 லோடு தக்காளி வந்தது. தற்போது 40 லோடுகள் மட்டுமே வருகின்றன. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது என்றார்.
மே மாதத்தில் உற்பத்தி குறைவு
கோவை வேளாண் பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களிலும் சித்திரை, ஆடி, கார்த்திகை ஆகிய பட்டங்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. 3 மாநிலங்களிலும் பிப்ரவரி, அக்டோபர் ஆகிய மாதங்களில் அதிக விளைச்சல் இருப்பதால் தக்காளி விலை வெகுவாக குறையும். ஏப்ரல் பிற்பகுதியில் (சித்திரை பட்டம்) விதைப்பு தொடங்குவதால் மே மாதத்தில் உற்பத்தி குறைந்து விலை அதிகமாகத்தான் இருக்கும். வரும் அக்டோபரில் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி விலை உயர்வால் பாதிப்பு ஏதேனும் ஏற்படுகிறதா என்று வியாசர்பாடியில் இயங்கி வரும் உணவக மேலாளர் ஞானத்திடம் கேட்டபோது, “எங்கள் உணவகத்தில் தக்காளி மலிவாக கிடைத்தால் தக்காளி சட்னி வழங்குவோம். அதன் விலை அதிகரித்தால் புதினா சட்னியை வழங்கிவிடுவோம். விலை உயர்வால் எங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT