Last Updated : 22 May, 2015 08:25 AM

 

Published : 22 May 2015 08:25 AM
Last Updated : 22 May 2015 08:25 AM

ரயில்வே துறையை நவீனப்படுத்த தொடங்கப்பட்ட சமூக வலைதளத்துக்கு பெரும் வரவேற்பு: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

ரயில்வே துறையை நவீனப் படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ள சமூக வலைதளம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. இதில், ஒரு வருடத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள் ளதோடு, வலைதளத்தில் தெரி விக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

ரயில்வே துறையை சீரமைத்து நவீனப்படுத்தும் வகையில், ‘லோக் கல் சர்க்கிள்’ (www.localcircles.com) என்ற சமூக வலைதளத்தை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. இதில், ‘ரயில்வே துறையை நவீனப்படுத்துவோம்’ (Make Railway Better) என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த வலைதளம் தொடங்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கம் குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிவேக ரயில்கள் இயக்குவது, சொகுசான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது, டிக்கெட் முன்பதிவை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சேவைகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருகிறது.

பொதுமக்களின் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘லோக்கல் சர்க்கிள்’ என்ற சமூக வலைதளத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டு தங்களது கருத்துகள், ஆலோசனைகள், புகார்களை தெரிவிக்கலாம். இவற்றை ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து, மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறியதா வது: இந்த வலைதளத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அண்மையில் இந்த வலைதளத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள இடங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளதாக புகார் தெரிவித்தேன். உடனடியாக இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

இதேபோல், கோவை விரைவு ரயிலில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருக்கும் போதுகூட, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படாமல், அடுத்தடுத்த வரிசைகளில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட புகாரை ரயில்வே நிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண் டுள்ளது. விரைவில் இதற்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x