Published : 30 May 2015 12:12 PM
Last Updated : 30 May 2015 12:12 PM

ஜெ. வழக்கில் மேல்முறையீட்டை தாமதிப்பது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல்: ராமதாஸ்

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் கர்நாடக அரசு இனியும் தாமதிப்பது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் மீண்டும் ஒருமுறை பரிந்துரை செய்துள்ளார்.

அதில், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யாவிட்டால் அது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்று கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்; வழி மொழிகிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதாகவும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதமும் எழுதினேன். ஆனால், கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தேவையற்ற தயக்கத்தைக் காட்டி வருகிறது. மேல்முறையீடு குறித்து முடிவெடுப்பதை இருமுறை ஒத்தி வைத்தது. அதன்பிறகும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா?

மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா? ஆகிய இரு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கும்படி தலைமை வழக்கறிஞரை கர்நாடக அரசு கேட்டு கொண்டிருந்தது.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நான், இந்த விளக்கங்கள் தேவையற்றவை என்றும், இவை இல்லாமலேயே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தேன். எனது நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையிலேயே கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் அளித்த விளக்கங்கள் அமைந்திருக்கின்றன.

ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டத்தின் முன் தாக்குப்பிடிக்காது; இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால் நீதிக் கேலிக் கூத்தாக்கப்பட்டு விடும் என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி,‘‘கர்நாடக நீதித்துறை மீதும், வழக்கை தொடர்ந்த அரசு மீதும் நம்பிக்கை வைத்து தான் இந்த வழக்கின் விசாரணையை கடந்த 2003 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமெனில் இவ்வழக்கை இயல்பான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்றும் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். இவை அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்.

கர்நாடக நீதித்துறை மீது உச்ச நீதிமன்றம் வைத்திருந்த நம்பிக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காப்பாற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்தது. அதே துரோகத்தை கர்நாடக அரசும் செய்துவிடக்கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும். அதைத்தான் கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞரும் தெரிவித்திருக்கிறார். இந்த வார்த்தைகளில் உள்ள உண்மையையும், நல்நோக்கத்தையும் புரிந்து கொண்டு கர்நாடகம் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவதற்கான அரசு வழக்கறிஞரை நியமிக்க உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என்று தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார். கர்நாடக சட்ட அதிகாரிகள் (நியமனம் - பணி நிபந்தனை) விதிகள் 1977-ன் படி அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசுக்கு அதிகாரம் இருப்பதால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வாதிட்ட பி.வி.ஆச்சாரியாவையே உச்ச நீதிமன்றத்திலும் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரைகள் அனைத்தும் வலுவானவை; யாராலும் மறுக்க முடியாதவை.

எனவே, கர்நாடக அரசின் மீது உச்ச நீதிமன்றம் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றவும், நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சாதகமான முடிவை நாளை மறுநாள் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடக அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை வழக்கறிஞர் கூறியதைப் போல நீதி கேலிக்கூத்தாக்கப்பட்டு விடும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x