Published : 13 May 2015 07:48 AM
Last Updated : 13 May 2015 07:48 AM
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவ்வாண்டு கோடை மழையால் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்திருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இம்மாவட்டங்களில் போதுமான கோடைமழை பெய்ய வில்லை. இதனால் மேய்ச்சல் நிலங்களில் புல், பூண்டுகள் முளைக்காமல் மேய்ச்சலுக்கு வழி ஏற்படவில்லை. ஆனால் இவ் வாண்டு கடந்த ஏப்ரல் தொடங்கி தற்போது வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியான இந்த மழையால் மேய்ச்சல் நிலங்கள் பச்சைபசேலென்று காட்சியளிக்கின்றன. தரிசு நிலங்களிலும் புல்வெளிகள் காணப்படுகின்றன.
புல்வெளி அதிகரிப்பு
திருநெல்வேலி கால்நடைத் துறை இணை இயக்குநர் கங்கராஜ் கூறும்போது, `திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலப்பரப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு கோடையில் இந்த மேய்ச்சல் நிலத்தில் புல்வெளிகள் உருவாகவில்லை. ஆனால் இவ் வாண்டு பெய்துவரும் மழையால் மேய்ச்சல் பரப்பில் பச்சை புல் வெளிகள் உருவாகியிருக்கின்றன. இது கால்நடைகளின் தீவனத்துக்கு கைகொடுக்கிறது’ என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரலில் 100.45 மி.மீ. மழை பதிவானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 60 மி.மீ. அதிகமாகும். இந்த கோடை மழையால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது.
தீவன உற்பத்தியும் உயர்வு
மேலும் இவ்வாண்டு திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் நெல் விளைச்சலும் இலக்கை மிஞ்சி இருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டில் 83,100 ஹெக்டேரில் நெல் விவசாயத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை மிஞ்சி 85,407 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 4.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மாடுகளுக்கு வைக்கோல் கிடைப் பதிலும் பிரச்சினை எழவில்லை.
கோடை மழை, மேய்ச்சல் நிலப் பரப்பு, பசுந்தீவன உற்பத்தி அதிகரிப்பு, வைக்கோல் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பது போன்ற சாதகமான அம்சங் கள் இவ்வாண்டு அதிகமிருந்த தால் பால் உற்பத்தியும் அதி கரித்திருப்பதாக விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தெரிவிக்கிறார்கள்.
பால் உற்பத்தி
திருநெல்வேலி ஆவின் வட்டாரத்தில் விசாரித்தபோது, `திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் நாளொன் றுக்கு 63 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாண்டு உற்பத்தி அதிகரித் திருப்பதால் நாளொன்றுக்கு 86 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 23 ஆயிரம் லிட்டர் அதிகம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT