Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM
சென்னையில் புதிதாக 40 இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
சென்னையில் சென்ற நிதியாண்டில் 30 இரவு நேர காப்பகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு அதில் 28 காப்பகங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மேலும் 40 இரவு நேர காப்பகங்கள் புதிதாக உருவாக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக எடுத்து வருகிறது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகளை பெறுவதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏழை, எளிய பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள். இப்படி வருவோருக்கு உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் தங்கும் வசதியின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, இவர்களுக்கு தங்கும் வசதி அளிக்கும் வண்ணம் சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள தங்குமிடங்கள் இரவு நேர காப்பகமாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
இதன்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 3 தங்குமிடங்கள் உள்ளன. அங்கு மேலும் 2 காப்பகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே தலா 7 தங்குமிடங்கள் உள்ளன, இந்த இரு மருத்துவமனைகளுக்கு மேலும் தலா 2 காப்பகங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதேபோல் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை, ஐ.ஒ.ஜி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தலா 1 தங்குமிடங்கள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் அனைத்திலும் தலா 2 காப்பகங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT