Published : 21 May 2015 03:54 PM
Last Updated : 21 May 2015 03:54 PM
நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கிறது என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து, தங்கள் கிராம குளத்துக்கு உயிரூட்டியுள்ளனர் கிராம மக்கள்.
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகில் உள்ள பெருவிளை பகுதியில் உள்ளது இரவிக்குளம். மிகவும் பழமையான இந்த குளம் ஆகாயத் தாமரை உள்ளிட்ட களை செடிகள் வளர்ந்து பாழ்பட்டு காணப்பட்டது. குளத்தை சீரமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இருந்தும் பலன் இல்லை.
ஒரு கட்டத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தொடர் கூட்டங்களை நடத்தினர். அண்மையில் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரும், பொது மக்களும் சேர்ந்து இரவிக்குளத்தை சீரமைத்தனர். இப்போது இரவிக்குளம் மிகவும் அருமையாக பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் உருமாறி இருக்கிறது.
இப்பணியை முன்னெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜசெல்வம் (66) கூறும்போது, `என் சொந்த ஊரு மார்த்தாண்டம் பக்கத்தில் நட்டாலம். பணி ஓய்வுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு முன் பெருவிளைக்கு குடியேறினோம். முதலில் இந்தக் குளத்தைப் பார்த்ததுமே இதை சுத்தம் செய்யணும்னு தோணுச்சு.
அரசு அதிகாரிகளுக்கு பல தடவை மனு போட்டோம். நடவடிக்கை எடுக்கல. உடனே இந்த பகுதியில் உள்ளவர்களை கூப்பிட்டு ஒரு கூட்டம் போட்டோம். முதல் கூட்டத்துக்கு 14 பேர் தான் வந்தாங்க. இரண்டாவது கூட்டத்தில் 51 பேர் வந்தாங்க. தொடர்ந்து கூட்டங்கள் நடத்தியதில் ஊரே ஒன்று கூடி நின்றது.
`பெருவிளை இரவிக்குளம் பாதுகாப்பு அமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி களம் கண்டோம். இந்த பணியில் எங்களோடு இப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இப்போது களைச்செடிகள் முற்றிலுமாக வெட்டி அகற்றப்பட்ட நிலையில் குளம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது’ என்றார்.
பெருவிளை ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் சரபுதீன் கூறும்போது, `என்னோட சின்ன வயசுல இந்த குளத்துல தான் நீச்சல் படிச்சேன். ஆனால் அந்த குளம் உருக்குலைந்து இருந்தப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. பரம்பரை, பரம்பரையாக இப்பகுதி மக்களோடு பின்னிப் பிணைந்த இந்தக் குளத்தை மீட்க ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
உடனே எங்க ஆட்டோ ஸ்டாண்ட் சார்பிலும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தோம். சிறு வயதில் குளித்து மகிழ்ந்த குளத்தில் நீண்ட காலத்துக்குப் பின்பு மீண்டும் குளிக்கும் வாய்ப்பு வந்துள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT