Published : 12 May 2015 08:24 PM
Last Updated : 12 May 2015 08:24 PM

இந்திய கடற்பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் மீன் பிடிக்க பரிந்துரை செய்த மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பு

இந்திய கடற்பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் மீன் பிடிக்க பரிந்துரை செய்த மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு தமிழக மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு மீன்வளத்தைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் ‘நீலப்புரட்சி’யை செயற்ப்படுத்துவதற்கு மத்திய மீன்வளத்துறை இணை இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் தமது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

இந்த மீனாகுமாரியின் அறிக்கையில், ''இந்திய ஆழ்கடல் பகுதியான சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீன்பிடிப்படகுகள் மீன்பிடிக்கலாம் எனவும், ஆனால் இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் 15 மீட்டர் நீளம் வரை உள்ள படகுகளை கொண்டு மட்டுமே மீன்பிடிக்கலாம் மேலும் 15 மீட்டருக்கு மேலான நீளம் கொண்ட இந்திய மீன்பிடிப் படகுகள், கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அரசு அதிகாரிகளிடம் அனுமதிக் கடிதம் பெற்றாக வேண்டும்'' உள்ளிட்ட விதிகளை வரையறுத்திருந்தது.

மீனாகுமாரியின் அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழக மற்றும் புதுவை மாநில மீனவர்கள் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஏப்ரல் 23 அன்று இந்தியாவின் 13 கடற்கரை மாநில மீனவர்கள் சார்பாக தேசிய மீனவர் பேரவை தலைமையில் டெல்லியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த மே 3 அன்று நரேந்திரமோடிக்கு அன்றைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ''இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீனாகுமாரின் அறிக்கைகள் உள்ளன. அதன் பரிந்துரையை ஏற்க கூடாது. முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு மீனாகுமாரியினுடைய அறிக்கை தயார் செய்யப்படவில்லை. எனவே அதை ஏற்று எந்த வழிகாட்டுதலையும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது, எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மத்திய அரசு இன்று மீனாகுமாரி அறிக்கையின் பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாக அறிவித்ததுடன், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி அளித்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும் இந்திய கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல் மீன்பிடித்தால் சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மேலும் முந்தைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டதுதான் இந்த மீனாக்குமாரி குழு எனவும் எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாலேயே மீன் பிடித் தடைக்காலம் 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மினவர்கள் வரவேற்பு

தமிழக மீனவர்கள் மீனாகுமாரியின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கு தமிழக மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரத்தை சார்ந்த தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஆர். செந்தில் வேல் கூறியதாவது,

மீனாகுமாரியின் அறிக்கை மத்திய அரசு நிராகரித்தை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் உள்ள மீனவர்கள் ஏற்கனவே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தகுதி படைத்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் மீனவர்கள் மட்டும் ஆழ்கடல் பகுதியில் எவ்வித நவின உபகரணங்களின்றி வருடத்திற்கு 45 ஆயிரம் டன் மீன்களை பிடித்து வருகின்றனர்.

நமது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உரிய அடிப்படை வசதிகளையும், ஊக்கங்களையும் கொடுத்தால் ஆழ்கடல் பகுதியில் இன்னும் அதிக அளவில் மீன்களை பிடிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x