Published : 21 May 2015 04:24 PM
Last Updated : 21 May 2015 04:24 PM
கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டியில் இருந்து வெளியேறும் காவிரி நீர் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. காவிரி கூட்டுக் குடிநீர் அனைத்து வார்டுகளுக்கும் வழங்க, நகராட்சி வளாகத்தில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பிரிந்து அனைத்து வார்டுகளுக்கும் தினமும் காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாள் பல மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சி 2 வாரங்கள் கூட நீடிக்கவில்லை. தற்போது பல வார்டுகளுக்கு காவிரி நீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், 8 மற்றும் 9வது வார்டுகளில் தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் விரைவில் தண்ணீர் வழங்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை என்கின்றனர் திருப்பத்தூர் மக்கள்.
5 குதிரை திறன்கொண்ட மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் காவிரி நீர் வீணாக கால்வாயில் கலப்பதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, நகரில் பல வார்டுகளுக்கு தண்ணீர் விநியோகிப்பதில் அதிக சிக்கல் நீடிக்கிறது.
இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘அதிக அழுத்தம் காரணமாக சில இடங்களில் குழாய்கள் உடைகின்றன. அதைக் கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. சில வார்டுகளில் குழாய்கள் புதைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பணி முடிந்ததும் தண்ணீர் விநியோகம் சீரடையும். நகராட்சியில் உள்ள மேல்நீர் தேக்கதொட்டியில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT