Last Updated : 27 May, 2015 05:23 PM

 

Published : 27 May 2015 05:23 PM
Last Updated : 27 May 2015 05:23 PM

மாணவர் சேர்க்கையில் கோவை தனியார் பள்ளிகள் விதி மீறல்: விசாரணை நடத்துவதாக அதிகாரி உறுதி

கோவையில் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையில் கட்டணம், புத்தகங்கள் போன்றவற்றில் அரசின் விதிகளை மீறி எதேச்சையாக கல்வி நிறுவனங்கள் முடிவெடுத்துச் செயல்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று கல்வி அதிகாரி உறுதியளித்துள்ளார்.

வரும் 2015-2016-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுவிட்டன.

நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் 450-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதன்படி, தனியார் பள்ளிகளும் 11-ம் வகுப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்களை உயர்த்தியுள்ளன. 450 மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் சில பள்ளிகளில் கட்-ஆப் போதவில்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்படுவதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

குறிப்பாக, "10-ம் வகுப்பு படித்த பள்ளியிலேயே நல்ல மதிப்பெண்ணுடன் தேர்வாகி இருந்தாலும் 11-ம் வகுப்புக்கு அதே பள்ளியில் இடம் கொடுக்கவில்லை. எதாவது ஒரு காரணம் கூறி தங்களுக்கு அட்மிஷனை தட்டிக் கழிக்கிறது தனியார் பள்ளி நிர்வாகங்கள்” என பெற்றோர் புகார் கூறுகின்றனர்.

இதேபோன்று, கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளனர். பள்ளி கட்டுமானப் பணிகள், ஆண்டு விழா, பொன் விழா ஆண்டு என்பன போன்ற காரணங்களை தெரிவித்து அட்மிஷனுக்காக பணம் வசூலிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெற்றோர் கூறும்போது, “கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பிலேயே 10-ம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படிக்கக் கூறினர். தற்போது, 10-ம் வகுப்பு புத்தகங்களுக்கு பணத்தையும் வசூலித்துவிட்டு பழைய புத்தகங்களைக் கொண்டே படியுங்கள் என தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, காலணி, சீருடை போன்றவற்றை அவர்கள் குறிப்பிடும் கடைகளில்தான் வாங்க வேண்டும் என அட்மிஷன் போடும்போதே கட்டாயப்படுத்துகின்றனர். அந்த குறிப்பிட்ட கடைகளில், மற்ற இடங்களைக் காட்டிலும் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது" என்றனர்.

மாற்றுத்திறனாளி

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்றால் பெரும்பாலும் அட்மிஷன் கொடுப்பதை தவிர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர் கூறியது:

கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்புக்கு மகளை சேர்க்கச் சென்றோம். நல்ல மதிப்பெண் இருந்தும், அட்மிஷன் கொடுக்கவில்லை. மாற்றுத்திறனைக் காரணம் காட்டி இடம் தர மறுத்துவிட்டனர். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தெரியப்படுத்தினோம். ஆனாலும், அட்மிஷன் கிடைக்கவில்லை என்றனர்.

அதிகாரி பதில்

இந்த புகார்கள் தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கீதா கூறியது: 10-ம் வகுப்பு படித்த பள்ளியிலேயே 11-ம் வகுப்புக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை, மதிப்பெண்ணைக் காரணம் காட்டி அட்மிஷன் தர மறுக்கின்றனர் என்பன போன்ற புகார்கள் பெற் றோர்களிடம் இருந்து வந்துள்ளன. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளைத் தொடர்பு கொண்டு அட்மிஷன் வழங்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

இதேபோன்று, 10-ம் வகுப்புக்கு சில பள்ளிகள், புது புத்தகங்கள் வழங்குவதில்லை என்ற புகார்களும் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து புது புத்தகங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

சீருடை, காலணி ஆகியவை குறிப்பிட்ட கடைகளில்தான் வாங்க வேண்டும் என்ற புகார் இதுவரை வரவில்லை. பெரும்பாலும், பள்ளிகளிலேயே சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படுகின்றன. இருந்தாலும்,புகார் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x