Published : 14 May 2014 03:47 PM
Last Updated : 14 May 2014 03:47 PM

இலங்கைத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயிர் பிழைப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திற்கு வந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 10 அகதிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மனித உரிமையை மீறிய இந்நடவடிக்கையையே அப்போதே நான் கண்டித்திருந்தேன்.

இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அகதிகளில் கதிர்வேலு தயாபரராஜா, உதயகலா ஆகிய இருவரையும் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், அதற்காகவே அவர்களை இன்டர்போல் உதவியுடன் இலங்கை அரசு கைது செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பி வந்த அப்பாவி அகதிகளை நிரூபிக்கப்படாத புகாரின் அடிப்படையில் துரத்தி, துரத்தி கைது செய்ய சிங்கள அரசு துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொடூரமான முறையில் கொன்றொழித்துவிட்டு அதற்கான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள மறுக்கும் ராஜபக்சே, நிரூபிக்கப்படாத பொருளாதார குற்றச்சாற்றுக்காக அகதிகளாக வந்த இருவரை சர்வதேச காவல்துறையை பயன்படுத்தி கைது செய்ய முயல்வது முரண்பாட்டின் உச்சம் ஆகும்.

இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தவிர மீதமுள்ள தமிழர்களையும் ஏதேனும் ஒரு வகையில் சித்திரவதை செய்வது அல்லது படுகொலை செய்வது தான் ராஜபக்சேவின் நோக்கமாகும். அதன் ஒருகட்டமாகத் தான் அகதிகளை சர்வதேச காவல்துறை மூலமாக கைது செய்ய இலங்கை முயல்கிறது.

இலங்கையின் இந்த சதிக்கு இந்தியா துணை போனால், அடுத்தகட்டமாக உரிமைகளுக்காக போராடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று கொடுமைகளுக்குள்ளாக்க ராஜபக்சே அரசு முயலும். 1951 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அகதிகளின் அந்தஸ்து தொடர்பான ஒப்பந்தத்தில், 'அகதிகள் எனப்படுபவர்கள் எல்லா சூழல்களிலும் அகதிகளாகவே கருதப்படுவார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒருவரின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்படுமென்றால், அந்த நாட்டிற்கு எந்த காலகட்டத்திலும் அவர் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசு திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்த ஒப்பந்தத்தின் 33 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல், ஒரு நாட்டில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிந்தால் அவரை அந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தின் 3 ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் எவரேனும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், அவர்களை இலங்கை அரசு தலைவாழை இலை போட்டு உபசரிக்காது; கடுமையான சித்திரவதைக்குத் தான் உள்ளாக்கும் என்பது உலகமறிந்த இரகசியம் ஆகும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மவுனசாட்சியாக இருக்கும் இந்திய அரசுக்கு இந்த உண்மை இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே, தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை சர்வதேச காவல்துறை மூலம் நாடு கடத்த முயலும் இலங்கையின் திட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் துணை போகக்கூடாது. தமிழகத்திலுள்ள அகதிகளை அவர்களின் விருப்பமில்லாமல் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டுள்ள 10 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x