Last Updated : 25 May, 2015 10:35 AM

 

Published : 25 May 2015 10:35 AM
Last Updated : 25 May 2015 10:35 AM

மாற்று சிறுநீரகத்துக்காக 4,704 பேர் பதிவு செய்து காத்திருப்பு: தானம் கிடைப்பது தாமதமாவதால் உயிரிழக்கும் பரிதாபம்

தமிழகம் முழுவதும் மாற்று சிறுநீரகத்துக்காக 4,704 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சிறுநீரகம் தானம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலும், டயாலிசிஸ் பலன் அளிக்காததாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேர், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். மூளைச் சாவு அடைந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. உரிய நேரத்தில் சிறுநீரகம் கிடைக்காமலும், டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) பலன் அளிக்காததாலும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆயிரக்கணக் கானோர் சிறுநீரகங்கள் செயலிழப் பால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தில் சிறுநீரகம் வேண்டி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் முதல் 4,704 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது:

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனாலும், உறுப்புகள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. சிறுநீரகங் கள் செயலிழந்த ஒருவர், 3 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து உயிர் வாழ்வது மிகவும் கடினம். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரகம் கிடைக்காததாலும், டயாலிசிஸ் செய்ய முடியாமல் போவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூளைச்சாவை உறுதி செய்து சான்று அளிக்க டாக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மூளைச்சாவு அடைந்தவர்கள் உயிரிழக்கும்போது, அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் போகிறது. இதுவே, உடல் உறுப்புகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

சிறுநீரகங்கள் செயலிழந்தவர் களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் பொருத்தப்படுகிறது. இவை தவிர நெருங்கிய ரத்த சொந்தங்கள் தங்களது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்கின்றனர். தூரத்து உறவினர்கள், நண்பர்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தால் அதை கமிட்டி ஏற்பதில்லை. சிறுநீரகம் கிடைப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.

தானம் செய்ய முன்வருவோர், உண்மையான உறவினர்களா, நண்பர்களா என்பதை கமிட்டி விசாரித்து அவர்களது சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பரிசோதனை கட்டாயம்

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் (பிபி) போன்றவையே முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தவிர பரம்பரையாக சிறுநீரக பாதிப் பாலும் தேவையில்லாத மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீர் வெளியேறுவது குறைதல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், முகம், கை, கால்களில் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன.

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு பெரும்பாலான நேரங்களில் அறி குறிகள் தெரியாது. அதனால் அடிக் கடி சிறுநீரக பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு 160 சிறுநீரகங்கள்

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 160 சிறுநீரகங்கள் தானமாக கிடைக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை மூளைச்சாவு அடைந்த 620 பேரிடம் இருந்து 1,113 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

தானம் செய்ய வருவோர், உண்மையான உறவினர்களா, நண்பர்களா என்பதை கமிட்டி விசாரித்து அவர்களது சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x