Published : 30 May 2015 02:34 PM
Last Updated : 30 May 2015 02:34 PM

நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்: பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

எறையூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டப்பட்ட கரும்புக்கு உரிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள் மேலும் பேசும்போது, “எறையூர் சர்க்கரை ஆலைக்கான இணை மின்சாரம் தயாரிக்கும் பணி மற்றும் ஆலை நவீனப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண்மை இடுபொருட்கள் பருவ காலத்துக்கு ஏற்ப உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடனுக்கான பழைய வட்டி விகிதத்தை மாற்றக்கூடாது. ஓடைகளின் குறுக்கே ஏற்கெனவே சேதமடைந்துள்ள தடுப்பணைகளை பராமரிப்பதோடு புதிய தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஏரிகளை தூர்வார வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் உபரி பாலை திருப்பி அனுப்பாமல், அவற்றிலிருந்து பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பருவம் தப்பியதால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணத்தையும். விவசாய தேவைக்கான மின் இணைப்புகளையும் விரைந்து வழங்க வேண்டும்” என்றனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் தரேஸ் அகமது பேசும்போது, “செட்டிகுளம் வணிக வளாகம் மூலம் இதுவரை 15,93,364 கிலோ சின்ன வெங்காயம் ரூ.2.80 கோடிக்கும், எளம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இதுவரை 5,355 குவிண்டால் பருத்தி ரூ.2.05 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் ரசீது வழங்காதது, அதிக விலை, தரக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட வட்டார உதவி இயக்குநர்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை மாதத்தில் மாவட்ட அளவிலான பயிர்க்கடன் மேளா நடைபெறும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களின் மொத்த விவசாய குடும்பங்களில் 10 சதவீதத்தினருக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொளக்காநத்தம், மருவத்தூர், புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சேவை மையம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இச்சேவை மையத்துக்கு ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப வல்லுநர் பொறுப்பு வகிப்பார். பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதை கட்டுப்படுத்தும் முறைகள், நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஆகியவற்றை அங்கு விவசாயிகள் பெறலாம்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x