Published : 28 May 2015 03:53 PM
Last Updated : 28 May 2015 03:53 PM

தொகுதி நிதியை செலவிடவில்லையா?- அன்புமணி விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நான் செலவழிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நான் செலவழிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக சில தொலைக்காட்சி செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பாமகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் தான் இத்தகைய வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்படி ஒவ்வொரு தொகுதியிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ. 5 கோடி நிதி வழங்கப்படும். இதில் நிர்வாகச் செலவுக்காக ரூ.10 லட்சம் போக மீதமுள்ள ரூ.4.90 கோடியும் மக்களவை உறுப்பினரின் பரிந்துரைப்படி, மக்கள் நலத் திட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரால் செலவிடப்படும்.

அதன்படி 2014-15 ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக ரூ.5.13 கோடி செலவில் 299 திட்டங்களைச் செயல்படுத்த பரிந்துரைத்துள்ளேன்.

இந்த பரிந்துரைகள் கடந்த மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பாகவே அனுப்பப்பட்டு விட்டன. இவற்றில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.3.30 கோடி மதிப்பிலான 193 பணிகளுக்கும், சேலம் மாவட்டத்தில் ரூ.67.24 லட்சம் மதிப்பிலான 36 பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இவைதவிர தருமபுரி மாவட்டத்தில் ரூ.93.166 லட்சம் மதிப்புள்ள 67 பணிகளுக்கு இன்னும் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை. இவற்றுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதி வழங்கியதும் இப்பணிகளும் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படும்.

மொத்தத்தில் 2014 -15 ஆம் ஆண்டில் நான் பரிந்துரை செய்த 299 பணிகளில் 296 பணிகள் மொத்தம் ரூ.4.90 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள பணிகள் 2015-16 ஆம் ஆண்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு இப்பணிகள் செயல்படுத்தி முடிக்கப்படும். இந்த விவரங்கள் அடங்கிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செய்திக்குறிப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, செயல்படாத, புதுப்பிக்கப்படாத இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த தவறான தகவல்களில் அடிப்படையில் சில தொலைக்காட்சிகளும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களும் வதந்திகளை பரப்புவது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் தர்மம்? என்பது தெரியவில்லை. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிடுவது தான் நானறிந்த ஊடக தர்மம் ஆகும்.

என்னைத் தொடர்பு கொண்டால் எந்த நேரமும் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை என்னிடம் விளக்கம் கேட்க விரும்பவில்லை எனில் தருமபுரியிலுள்ள எனது அலுவலகத்திலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு உண்மை நிலையை உறுதி செய்து கொண்டிருக்கலாம். அதுவும் முடியாவிட்டால் www.tnrd.gov.in என்ற முகவரி கொண்ட தமிழக அரசின் இணையதளத்தில் இதுகுறித்த விவரங்கள் உள்ளன. அதையாவது பார்த்து உண்மை நிலை என்ன? என்பதை ஊடகங்கள் தெரிவித்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் அரசியல் தூண்டுதலுக்கு ஊடகங்கள் கருவியானது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒட்டுமொத்தமாக ஒரே திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், நான் அப்படி செய்யவில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் அடிப்படைத் தேவை என்ன? என்பதை கண்டறிந்து தொகுதி நிதியை பயனுள்ள வகையில் ஒதுக்கீடு செய்து வருகிறேன்.

இதையெல்லாம் மறைக்கும் வகையில் அரசியல் ரீதியாக என்னை எதிர்க்க முடியாதவர்கள் அவதூறு தகவல்களை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட போது, தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ள தருமபுரியை மாநிலத்தின் முதன்மை மாவட்டமாக உயர்த்துவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அந்த இலக்கை நோக்கித் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

தருமபுரியில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள், தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப்பாதை அமைக்கும் திட்டம், வேலைவாய்ப்பைப் பெருக்க சிப்காட் தொழிற்பூங்காத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள நான், இதற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியை கோரி வருகிறேன்.

தருமபுரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உயர்த்த இன்னும் ரூ.5,000 கோடியில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான திட்டங்களை வகுத்துள்ள நான், அவற்றுக்கான நிதியுதவி பெற கடுமையாக போராடி வருகிறேன். இதை சிதைக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம்.

தமிழகத்தின் 50 ஆண்டுகால ஆட்சி குறித்து என்னுடன் நேரடியாக விவாதம் செய்ய துணிச்சல் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட வதந்திகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். தருமபுரியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். அதுமட்டுமின்றி, வதந்தி பரப்புபவர்கள் விரும்பினால் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர்களை தருமபுரி மாவட்டத்திற்கு எனது சொந்த செலவில் அழைத்துச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரடியாக காட்டி விளக்கவும் தயாராகவே இருக்கிறேன்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x