Published : 28 May 2015 08:33 AM
Last Updated : 28 May 2015 08:33 AM

சட்டப்பேரவை கூட்டம் நடத்த தடையில்லை: தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மெட்ரோ ரயிலை இயக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர் தலால் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரி வித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாம் என்றும் அவர் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிகள் அம லாக்கம் குறித்து நிருபர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று அளித்த பேட்டி:

சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், கூடுதல் தேர்தல் அதிகாரி யாக சென்னை ஆட்சியர் எ.சுந்தரவல்லி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக 4-வது மண்டல டிஆர்ஓ சவரிமுத்து ஆகியோர் பணியாற்றுவர்.

அமைச்சர்கள் அரசு வாகனத்தை பயன்படுத்தலாமா?

அமைச்சர்கள் தங்களது வீடு மற்றும் அலுவலகத்துக்கு இடை யில் மட்டும் அரசு வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்களே?

தனி நபர்களை சென்றடையும் எந்த உதவிகளும் வழங்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அதற்கு அனுமதியில்லை.

தேர்தலை கண்காணிக்க குழுக் கள் அமைக்கப்படுமா?

போதுமான அதிகாரிகளுடன் தேவையான கண்காணிப்பு குழுக் கள் அமைக்கப்படும். சிறப்பு கண்காணிப்பு குழுக்கள், மண்டல குழுக்கள் மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்

பதற்றமான வாக்குச்சாவடிகள் எப்போது அறிவிக்கப்படும்?

போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சூழலை பொறுத்துதான் பதற்றமான வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படும்.

ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டது ஏன்?

இது 100 சதவீதம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. பிஹாரில் 11 தொகுதிகள் உட்பட நேற்று வரை 19 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால் பிஹார் தவிர திரிபுரா, மேகாலயா, தமிழகம், கேரளத்தில் மட்டும்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் திட்டங்களை அறிவிக்க முடியுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், எம்பி, எம்எல்ஏ நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய திட்டங்கள், நிதி வழங்குதல் போன்றவை அந்தத் தொகுதியில் மட்டும் செயல்படுத்த முடியாது. ஆனால், அந்தத் தொகுதி அடங் கிய மாவட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்த தடை இல்லை.

அமைச்சர்கள் சுற்றுப்பயணம், வாகனங்களை பயன்படுத்துதல், விளம்பரம், அதிகாரிகள் இட மாற்றம் போன்றவை மாவட்டம் முழுவதும் நடத்தை விதிகளின் கீழ் வரும். குறிப்பாக மிக்சி, கிரைண்டர் வழங்குதல், தனி மனிதன் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது.

மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க முடியுமா?

ஒரு திட்டம் தொடங்கப்படும் போது, தேர்தல் நடக்கும் தொகுதி யைச் சேர்ந்த வாக்காளர்களும் அதனால் பயன்பெறுவதாக இருப்பின் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே தொடங்க முடியும். மெட்ரோ ரயில் சேவையையும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தொடங்கலாம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து?

அதுபற்றி இனிமேல்தான் ஆய்வு செய்யப்படும். கூடுதல் படையினர் தேவைப்பட்டால் தேர்தல் ஆணை யத்திடம் கோரிக்கை விடுக்கப்படும்.

ஆர்.கே.நகர் பகுதி மக்கள் இப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியுமா?

வேட்புமனு தாக்கல் முடியும் 10-ம் தேதி வரை மனுக்கள் அளிக்கலாம். பரிசீலித்து பட்டிய லில் இணைக்கப்படும்.

சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தலாமா?

சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவதற்கு தடை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x