Published : 05 May 2014 02:26 PM
Last Updated : 05 May 2014 02:26 PM
16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவிற்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மனிதாபிமானற்ற செயலும் நடந்திருக்கிறது.
இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கனவே தெரிவித்து விட்டது.
இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை, அமெரிக்கா நிராகரித்ததோடு, "இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடு பட்டதாக சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளாத இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது" என்றே திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்" இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT