Published : 27 May 2015 06:11 PM
Last Updated : 27 May 2015 06:11 PM

போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பயணிகளின் வெறுப்பை சம்பாதித்த போலீஸார்

வெள்ளமடம் அருகே சாலையில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நடப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பணியை மறந்து தன்னிச்சையாக செயல்பட்ட போலீஸார் பயணிகளின் வெறுப்பை சம்பாதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகளில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வெள்ளமடம் பகுதியில் 200 மீட்டர் தூரத்துக்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் வடசேரி, புத்தேரி, இறச்சக்குளம், துவரங்காடு, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

வெள்ளமடம் வழியே கனரக வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் தங்கள் பணியை மறந்து சுய வேலைகளை கவனிப்பதால் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. ஒருவழிப்பாதையில் தவறுதலாக வந்த மினி டெம்போ வேனை நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். ஓட்டுநரை திட்டிய பின், வேனில் ஏறி ஒரு குலை நுங்கை எடுத்துக்கொண்டு, கிரீன் சிக்னல் காட்டினார்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வந்திருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், சாலையோரத்தில் நின்றபடி வேறொரு நபரிடம் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தார். பணியை மறந்த இவர்களால் வெள்ளமடம் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x