Published : 31 May 2015 08:51 AM
Last Updated : 31 May 2015 08:51 AM

அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து 150 பவுன் ரூ.3 லட்சம் கொள்ளை: திருக்கழுக்குன்றம் அருகே துணிகரம்

திருக்கழுக்குன்றம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 150 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளைபோன சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

திருக்கழுக்குன்றம் அடுத்த அகத்தீஸ்வரமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்தவர் துரை பாண்டியன். அரசி ஆலை உரிமை யாளர். இவர் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக, வீட்டை பூட்டிக்கொண்டு சிவகாசிக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டி ருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். இதுகுறித்து, அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் வீடு திரும்பிய அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த அவரது மகள்க ளின் 150 பவுன் நகை, 2 நாட்க ளுக்கு முன்பு நடைபெற்ற அவரது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக, அன்பளிப்பாக வந்திருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள், கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

மேலும் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் டிவி பார்த்தபடி அங்கிருந்த உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு சாவகாசமாக கொள்ளை யடித்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கழுக் குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுகுன்றம் பகுதியில் கடந்த மாதம் மட்டும் 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீஸார் முறையாக ரோந்து பணிகளில் ஈடுபடாததே, இதற்கு காரணம் என அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x