Published : 13 May 2014 10:03 AM
Last Updated : 13 May 2014 10:03 AM

சேலத்தில் புற்றுநோயால் ஒரே மாதத்தில் 10 பேர் பலி: சூழல் மாசு அச்சத்தில் பொதுமக்கள்

சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு பத்து பேர் இறந்துள்ளனர். இரும்பு குடோன், வெல்டிங் புகை, டயர் எரிப்பது போன்ற வற்றால் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து நோய் பரவ காரண மாக இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள் ளது. குறிப்பாக சேலம் மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான நெத்திமேடு அருகே உள்ள புத்தூர் இட்டேரி ரோடு, கொடாரங்காடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத் தில் மட்டும் 10 பேர் புற்றுநோ யால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கொடாரங்காட்டைச் சேர்ந்த ஏழுமலை கவுண்டர் (67), லட்சுமி அம்மாள் (67), லட்சுமி (52), அருணாச்சலம் (67), டாக்டர் வைத்தியலிங்கம் (71), பெருமாள் கவுண்டர் (77), கந்தசாமி (61) உள்பட பத்து பேர் இறந்துள்ளனர். திடீரென ஒரே பகுதியில் வசிக்கும் மக்கள் புற்றுநோயால் உயிரிழந்திருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு மாறாக பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள் ளது. குறிப்பாக இரும்பு உருக்கும் தொழிற்சாலைகளும், இரும்புக்கு பாலீஸ் போடும் தொழிற்சாலை, மருந்து கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை, மதுபாட்டில் சுத்தம் செய்யும் ஆலை, பழைய பேப்பர் மறுசுழற்சி ஆலை உள்ளிட்டவை இயங்கிவருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையாலும், கழிவுகளை நிலத்தடியில் சுத்திகரிக்காமல் விடுவதாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து கொடாரங்காடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் கூறும்போது, “ஒரு காலத்தில் மாநகரின் ஒதுக்குப்புறமாக இப்பகுதி விளங்கியது. அப்போது, கிழங்குமாவு, இரும்பு குடோன், பழைய பொருட்களை சுத்திகரிக்கும் ஆலைகள் இயங்கி வந்தன. தற்போது, மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது. தற்போது மாவு மில்களைத் தவிர மற்ற ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவு, வாயுக்கள் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சுகிறோம்,” என்றனர்.

கேன்சர் நோயால் இறந்த லட்சுமியின் மருமகள் மஞ்சுளா கூறியதாவது: எனது மாமியார் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு எலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, நடத்திய பரிசோதனையில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களில் இறந்து விட்டார். திடீரென புற்றுநோய் பாதிப்புக்கான காரணம் புரியவில்லை. அதிகாரிகள் தகுந்த விசாரணை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x