Published : 13 May 2015 10:35 AM
Last Updated : 13 May 2015 10:35 AM
நந்தனம் அரசுக் கல்லூரியின் ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் க.ரகுராமன் (36) பிறந்தது திருநெல்வேலியில். படித்த தெல்லாம் சென்னையில்தான். பத்து வயதில் பார்வை நரம்பில் போதிய வளர்ச்சி இல்லாமையால் இவருக்கு முற்றிலுமாக பார்வைத்திறன் பறிபோனது.
ஆனாலும், மனம் தளராமல் தன்னம்பிக்கையோடு படித்து, தற்போது அரசுக் கல்லூரியில் பணிசெய்து கொண்டிருப்பதோடு, தன்னைப்போல் பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக ‘பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கான இலவச கோடை பயிற்சி முகாமை’ ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார் பேராசிரியர் ரகுராமன். சென்னை அம்பத்தூரில் உள்ள சேதுபாஸ்கரா மேல்நிலைப் பள்ளியில் மே-8 தொடங்கி, 13-ம் தேதி (இன்று) வரை நடைபெறுகிற 4-ம் ஆண்டு கோடைகாலப் பயிற்சி முகாம் பணிகளில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தவரிடம் ‘தி இந்து’வுக்காக பேசியதிலிருந்து..
“சிறுவயதிலே நான் பார்த்து ரசித்து பழகியவையெல்லாம், பார்வை பறிபோன பிறகு என்னை விட்டுப் போனதாக உணர்ந்தேன். ஆனாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. மற்றவர்களை விட கூடுதலா உழைக்கணும்னு முடிவு செஞ்சு சிரமப்பட்டு படிச்சேன்.
என்னோட ஆசிரியர்கள் எனக்கு சிறந்த வழிகாட்டியா இருந்து உதவி செஞ்சாங்க. நாமும் பார்வையற்ற சக நண்பர்களுக்கு ஏதாவது செய்யணும் என்கிற எண்ணம் அப்போது வந்தது. அதுதான், இந்த இலவச கோடை பயிற்சி முகாம் உருவாக முதல் விதை…” என்று தன் சிறுவயது எண்ணத்துக்கு செயல்வடிவம் அமைந்ததைப் பற்றி பெருமிதத்தோடு கூறினார்.
“பார்வைத் திறனற்றவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளை கொடுக்கிறீர்கள்…?” என்றதற்கு, “இந்த கோடைகாலப் பயிற்சியை பெறும் மாற்றுத்திறனாளி நண்பர் களுக்கு மேல் படிப்புக்கான வழிகாட்டியாகவும், வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் முயற்சியாகவும் நடத்துகிறோம்.
அதனால்தான் பிளஸ் 2 முடித்த பார்வைத்திறனற்ற மாணவ - மாணவிகளுக்கென்றே சிறப்பு முகாமாக இதை நடத்துகின்றோம். மேல் படிப்புக்கான ஆலோ சனைகள், போட்டித் தேர்வுக்காக தயாராகும் முறைகள், ஆளுமைத் திறனை வளர்த்தல், ஆங்கிலப் பயிற்சி, யோகா, கம்ப்யூட்டர் பயிற்சி யென 12 வகையான பயிற்சிகளைத் தருகின்றோம்” என்றார்.
“இந்த பயிற்சிகள் பார்வைத் திறனற்ற மாணவர்களுக்குள் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத் துகிறது…?” என்று கேட்டதும், “நல்ல நம்பிக்கைத் தருகிற விளைவுகளை இந்த முகாம் ஏற்படுத்தியிருக்கு. மாற்றுத்திறனாளி மாணவர்களா லும் எந்த ஒரு செயலையும் செய்ய முடியுங்கிற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் வகையில் மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பயிற்சிகளை சிறப்புக் கருத்தாளர்கள் பயிற்சியில் வழங்குகிறார்கள்.
அதுமட்டுமின்றி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திறமையாளர்களை அழைத்துவந்து, அவர்களின் வெற்றி பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளச் சொல்கி றோம். இதைக் கேட்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை உண்டாகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் நடை பெற்ற இந்த முகாம்களில் பங்கேற்ற பல மாணவர்கள் இன்றைக்கு உயர்கல்வி படித்துக்கொண்டு இருப்பதும், இன்னும் சிலர் வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி இருப்பதுமே இதற்கு சரியான சாட்சி…” என்று கூறினார்.
மேலும் “இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை. தங்குமிடம், உணவு என அனைத்தும் முற்றிலும் இலவசம். முகாமை நடத்துவதற்கு ‘திருஷ்டி ரோட்டராக்ட் கிளப்’ பேருதவியாக இருக்கிறது. அவர் களின் வழிகாட்டுதலும் உதவியும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நிச்சயம் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்றும் என்ற நம்பிக்கையோடுதான் இந்த முகாமை ஒருங்கிணைத்து வருகிறேன்..” என்றார் பேராசிரியர் ரகுராமன்.
(பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் மேல் படிப்புக்கான ஆலோசனைகளைப் பெறவும், ஆண்டுதோறும் நடைபெறும் கோடைப் பயிற்சி முகாமில் பங்கேற் கவும் 98400 18012 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.)
பார்வையின்றி பயணிக்கிற, வழியெங்கும் இருளே சூழ்ந்திருப் பதாக நினைத்து தயங்கி நிற்கிற மாற்றுத்திறனாளி நண்பர்களும் நாளைய சாதனை யாளர்களாய், சமுதாயத்தையே மாற்றும் திறனாளிகளாய் மலர புதிய ஒளிவிளக்காய் இந்தப் பயிற்சி முகாம் அமைந்திருக்கிறது என்றால் சற்றும் மிகையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT